ஒரு ஊரில் ஒருவர் மளிகைக்கடை ஒன்று வைத்து நடத்தி வந்தார். ஒருநாள் அந்த வழியாக வந்த இரண்டு குட்டி பையன்கள் அவருடைய கடையின் முன்பாக நின்று சண்டை போட்டுக்கொண்டனர். அதை பார்த்த கடைக்காரர் அவர்களை அழைத்து ஏன் சண்டை போடுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்களில் ஒருவன் அண்ணா! நாங்கள் இரண்டு பேரும் இந்த வழியாக நடந்து வந்து கொண்டிருக்கும்போது இந்த 50 ரூபாய் நோட்டு தரையில் கிடந்ததை பார்த்தோம். இவன் நான் தான் முதலில் பார்த்தேன். அதனால் எனக்கு தான் இது சொந்தம் என்கிறான். ஆனால், நான் தான் முதலில் பார்த்தேன். இப்போது சொல்லுங்கள், இந்த 50 ரூபாய் நோட்டு யாருக்கு சொந்தம் என்று கேட்டான். இதைக்கேட்ட பிறகு கடைக்காரர் இருவரும் சிறுவர்கள் தானே இவர்களை ஏமாற்றி இந்த 50 ரூபாயை நாம் வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்தார். குட்டி பசங்களா சற்றுமுன் என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. நான் தேடிக்கொண்டிருந்தேன், நல்ல வேலை அது உங்கள் கையில் கிடைத்துவிட்டது. இருவரும் இந்த 10 ரூபாயை வைத்துக்கொண்டு, அந்த 50 ரூபாயை என்னிடம் கொடுங்கள் என்று கேட்டார். இருவரும் சரி என்று அந்த பணத்தை அவரிடம் கொடுத்தனர். பதிலுக்கு அவரும் 10 ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்ததும் இருவரும் வாங்கிக் கொண்டு சென்றனர். அந்த சிறுவர்களிடம் இருந்து எப்படியோ ஏமாற்றி 50 ரூபாயை வாங்கி விட்டோம், ஒரு வேலையும் செய்யாமல் 40 ரூபாய் லாபம் என்ற மகிழ்ச்சியுடன் அந்த 50 ரூபாய் நோட்டை எடுத்துப் பார்த்தவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார். ஏனென்றால், அவர்கள் கொடுத்த 50 ரூபாய் சிறுவர்கள் விளையாட பயன்படுத்தும் விளையாட்டு ரூபாய் நோட்டு. அடடா! நம்முடையப் பணம் 10 ரூபாய் இப்படி வீணாகப்போய் விட்டதே என்று வருத்தப்பட்டார். அப்போது அந்த சிறுவர்கள் இருவரும் தனது தந்தையுடன் கடைக்கு வந்தனர். கடைக்காரரிடம் சிறுவர்களின் தந்தை சற்று முன்பு இவர்கள் உங்களிடம் கீழே கிடந்ததென்று 50 ரூபாய் நோட்டை கொடுத்தார்களே அதை திருப்பிக் கொடுங்கள். நீங்கள் கொடுத்த 10 ரூபாயை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்றார். கடைக்காரருக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறினார். 50 ரூபாயை கொடுக்கவில்லை என்றால் ஏன் என்று கேட்பார்கள். இந்த சிறுவர்கள் விளையாட்டு 50 ரூபாய் நோட்டைத்தான் கொடுத்தார்கள் என்று சொன்னால் பிறகு எதற்கு நீங்கள் 10 ரூபாயை கொடுத்தீர்கள் என்று கேட்பார்கள். வாங்கவே இல்லை என்று சொன்னால் ஏதாவது தவறாக நினைத்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டு அந்த 10 ரூபாயை வாங்கிக்கொண்டு அவருடைய 50 ரூபாயை கொடுத்தார். மற்றவர்களை ஏமாற்றினால் நாமும் ஒருநாள் ஏமாற்றப்படுவோம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment