இளைஞன் ஒருவன் குருவிடம் வந்து, நான் என்னுடைய வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை. என்னை எல்லோரும் நீ ஒன்றுக்கும் உதவாதவன் என்று கூறுகிறார்கள். எனக்கு வேலை இல்லை, எனக்கு திறமை இல்லை, என்னால் எதுவும் செய்ய இயலவில்லை, நான் என்ன செய்வது என்று வாழ்க்கையையே வெறுத்தவன் போல் பேசினான். குருவோ, அவன் அருகே சென்று கொண்டிருந்த எறும்பையும், தூரத்தில் இருந்த யானையையும் காட்டி இவற்றில் அதிகம் பலம் வாய்ந்தது எது? என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன், உடனடியாக யானை தான் அதிகம் பலம் வாய்ந்தது என்று கூறினான். குருவோ சிரித்துக்கொண்டே, யானை உருவத்தில் தான் பெரியது ஆனால் அதன் எடையின் இரண்டு மடங்கு மேலான சுமையை கூட அதனால் சுமக்க மிகவும் கடினம், ஆனால் உருவத்தில் சிறிதாக இருந்தாலும் அதன் எடையை விட 50 மடங்கு பெரிய பொருளை எறும்பினால் சுமக்க முடியும். இப்பொழுது இவற்றில் எது பலம் வாய்ந்தது? என குரு கேட்க, இளைஞன் எனக்கு இப்பொழுது உண்மை தெரிகிறது, எறும்பு தான் அதிக பலம் வாய்ந்தது என்றான். நம்முள் பல வேளைகளில், பலவிதமான திறமைகள் இருக்கின்றது ஆனால் அவை நம்மிலே இருப்பதை அறிந்தும் அதை நாம் பயன்படுத்தாமல் இருக்கின்றோம். நம்முடைய வாழ்க்கையிலே திறமை எனும் விளக்கு இருந்தும், அதிலே நாம் தேவையான எண்ணெய் என்னும் உழைப்பை காட்டாமல் இருப்பதால் அது வாழ்க்கை என்ற ஒளியை பிரகாசிப்பதில்லை என்று குரு கூறினார்.
No comments:
Post a Comment