கரும்பலகையில் “1000” என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார். நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான். இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் “10000” என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார். "பத்தாயிரம்," என்று உடனடியாகப் பதில் வந்தது. இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் “010000” என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார். "அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான். ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது. அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை. அது போன்றதுதான் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது. அதுவே தலைகீழாக அமைந்தால், பதில் உனக்கே தெரியும் என்று முடித்தார். வியாபாரி ஒருவர் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என ஆசைப்பட்டார். ஆசைப்பட்டால் மட்டும் போதுமா அதற்கு உழைக்க வேண்டும் அல்லவா! அவருக்கு அது தெரியவில்லை. உழைப்பின் பக்கம் அவர் செல்லாததால் தோல்வி அவரை அணைத்துக்கொண்டது. தொழிலில் நஷ்டத்தை சந்தித்தான் காற்று போன பலூன் போல அவரது மனம் மாறியது. வீட்டிற்கு செல்ல மனமில்லை. கால் போன போக்கில் ஆற்றாங்கரைக்கு சென்றார். அங்கே மெல்லிய நிலா வெளிச்சம் ஆற்றங்கரையை அலங்கரித்தது. ஓரிடத்தில் அமர்ந்தவர் தனது நினைவுகளை ஓடவிட்டார். வியாபாரத்தில் தோற்றுப்போன கடந்த காலம் அவரை அழுத்தியது. குடும்பத்தை எப்படி காப்பாற்றப்போகிறோம். என்னும் எதிர்காலம் அவரை சுக்கு நூறாக்கியது. இப்படி மனம் ஓடிக் கொண்டிருக்கும் போதே கையில் அருகில் இருந்த கற்களை நோக்கி ஓடியது அதை எடுத்து ஆற்றில் வீசிக்கொண்டே இருந்தது. இப்படி இரவு முழுவதும் அவர் அங்கேயே தங்கினார். இதனால் கற்களின் எண்ணிக்கை குறைந்தது. பொழுது விடிய ஆரம்பித்தது. கதிரவன் அங்கு வெளிச்சத்தை கொடுக்க ஆரம்பித்தான் இரவு முழுவதும் தான் வீசிக்கொண்டிருந்த கற்கள் அங்கே ஒளி வீசியது. காரணம் அது சாதாரண கூழாங்கல் அல்ல. விலை உயர்ந்த வைரக்கல். இதைப்பார்த்தவரின் மனதில் இருள் படர்ந்தது. என்னடா இது கைக்கு கிடைத்ததை அறியாமல் இப்படி சிந்தனையில் இருந்துவிட்டோமே என வருத்தப்பட்டார். நம்மில் பலரும் இந்த கடந்த காலத்தை நினைத்து வருந்துகிறோம். எதிர்காலத்தை எண்ணி வியக்கிறோம். சரி நிகழ்காலத்தில் வேலை செய்கிறோமா என்றால் அதுவும் இல்லை. செக்குமாடு மாதிரி திரும்ப திரும்ப ஒரே வேலையை ஆர்வமில்லாது செய்வதுதான் இதற்கு காரணம் நிகழ்காலத்தில் வாழுங்கள் வேலையை காதலியுங்கள்.
No comments:
Post a Comment