ஒருவர் ஒரு சிறப்புச் சொற்பொழிவிற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றி விளக்கமாக பேச வேண்டிய சொற்பொழிவு அது. அது சம்பந்தமாக நிறைய ஆராய்ச்சிகள் செய்து, நிறைய நூல்கள் படித்து, அதன் அனைத்து அம்சங்களையும் விளக்கி கேட்பவருக்கு எந்தவொரு சந்தேகமோ, குழப்பமோ வராத அளவு தன் பேச்சு இருக்கும்படி தயார் செய்து முடித்தார். நிகழ்ச்சியில் பேசும் முன் ஒத்திகை பார்த்து, சொற்பொழிவு எப்படி இருக்கிறது என்ற கருத்தை அறிந்து கொள்ள விரும்பிய அவர் ஒரு நண்பரை அழைத்து அவரிடம் பேசிக் காட்டினார். கணீரென்ற குரலில் அருவியாக கருத்தான வார்த்தைகளைக் கொட்டி மிகச் சிறப்பாகப் பேசி விட்டு தன் நண்பரின் அபிப்பிராயத்தை அவர் கேட்டார். நண்பர் அவரை இரக்கத்துடன் பார்த்து சொன்னார். “பாவம், உனக்கு சுருக்கமாகச் சொல்லத் தெரியவில்லை.” அவர் விக்கித்துப் போனார். சிலருக்கு பாராட்ட மனம் வராது. எல்லா நல்லவற்றிலும், எல்லா சிறப்புகளிலும் ஏதாவது ஒரு குற்றம் கிடைக்காதா என்று கஷ்டப்பட்டு தேடுவார்கள். அப்படித் தேடினால் எதிலும் எப்போதும் ஓரிரு சில்லறைத் தவறுகள் அல்லது குறைபாடுகள் கண்டிப்பாகக் கிடைக்கும். அப்படிக் கண்டுபிடிப்பதை மாபெரும் குற்றங்களாகச் சொல்லி மகிழ்வார்கள். மற்றவர்களின் சந்தோஷங்களை ஒரேயடியாக வடிய வைத்து விடுவார்கள்.இது போல குறைகளை சொல்லி கொண்டிருப்பவர்களால் கடைசி வரைக்கும் முன்னேறவே முடியாது. முன்னேறினாலும் இவர்களுக்கு போட்டியாக யாருமே வரக் கூடாது என்று இவர்கள் கருதுவதால் இவர்களுடைய சுயநலம் கடைசி காலத்தில் அவர்களை அழித்துவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக