புதன், 16 ஜூலை, 2025

ARC-G2-023

 



ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குப் பின்னால் ஒரு பை-யை கட்டிக் கொண்டு, வினோதமான உணர்வுகளை மனித இனத்திலிருந்து சேகரிக்க ஆரம்பித்தது. மனிதர்களுக்கு இடையே ஒரு இடத்தில் சண்டை நடப்பதைப் பார்த்தால் அங்குள்ள கோபத்தை அது சேகரிக்கும். இன்னொரு இடத்தில் இருக்கும் ஏமாற்றத்தை அது சேகரித்துக் கொள்ளும். பொறாமையில் ஒருவன் தீயாக எரிந்ததைப் பார்த்தால் சிட்டுக்குருவிக்கு சந்தோசம் வந்து விடும். தன் பையில் பொறாமையை சேகரித்துக் கொள்ளும். இப்படி பார்க்கும் இடமெல்லாம் அபூர்வமான வினோதமான உணர்வுகளைச் சேகரிக்க ஆரம்பித்தது. வினோதமான உணர்வுகளுக்கோ அளவே இல்லை. தனது சேகரிப்பினை எண்ணி மகிழ்ந்து போனது அது!. ஒரு நாள் அதற்கு பறப்பதற்கு சற்று கஷ்டமாக இருந்தது. இது வரை லகுவாக ஜம்மென்று வானில் சீறிப் பாய்ந்த அதனால், இன்று வேகமாகப் பறக்க முடியவில்லை. சோர்ந்து போன அது, ஒரு மரத்தில் வந்து உட்கார்ந்தது. அதைப் பார்த்த அதனுடைய நண்பனான நாய், "என்ன குருவி! வழக்கத்திற்கு மாறாக இப்படிச் சோர்ந்து உட்கார்ந்திருக்கிறாயே! உடம்புக்கு என்ன?" என்றது. "நண்பனே! என்னால் பறக்க முடியவில்லை! வேகமாகச் செயல்பட முடியவில்லை. எனது ஆற்றல் போய் விட்டதைப் போல உணர்கிறேன். காரணமும் புரியவில்லை" என்றது. நண்பனான நாய், "அது சரி, உன் பின்னால் ஒரு பை வைத்திருக்கிறாயே, அதில் என்ன இருக்கிறது?" என்று கேட்டது. "அதுவா, என்னுடைய சேகரிப்புகளான உணர்வுகளை வைத்திருக்கிறேன்!" என்றது குருவி. "அட, அப்படியா? என்ன என்ன உணர்வுகள்? எனக்குச் சொல்லேன்" என்றது நாய். "எங்கு பார்த்தாலும் ஏமாற்றம், பொறாமை, சோகம், கோபம், பேராசை. இவையெல்லாம் வேறு வேறு ரூபத்தில் விதவிதமாக எனக்குக் கிடைத்தன. அனைத்தையும் சேகரித்திருக்கிறேன்." என்றது குருவி. "அப்படியா! இந்த பை தான் உன்னைப் பறக்க விடாமல் செய்கிறது என நான் எண்ணுகிறேன். இதைக் கவிழ்த்துக் கொட்டிப் பாரேன்" என்றது நாய். "சே! புரியாமல் பேசுகிறாயே! இது மிகவும் சிறிய பை! இதில் கனமே இல்லை" என்றது குருவி. நாய் விடவில்லை. "நான் சொல்வதைச் செய்து பாரேன்" என்றது அது. ஒத்துக் கொண்ட குருவி, தன் பையிலிருந்து ஒரு கோப உணர்வை எடுத்துக் கீழே போட்டது. அடுத்த கணம் வானில் ஜிவ்வென்று பறந்தது. அதிசயித்துப் போன அது இன்னொரு உணர்வான பொறாமையை எடுத்துக் கீழே போட்டது. என்ன அதிசயம்! இன்னும் ஆற்றல் கூடி அதிக உயரத்தில் பறக்க ஆரம்பித்தது. ஒவ்வொன்றாக அது கீழே போடப் போட முன்பிருந்ததை விட லேசாக மாறி அதிக உயரத்தில் அதிக ஆற்றலுடன் அது பறக்க ஆரம்பித்து விண்ணையே தொட்டு விட்டது. சிறிது காலம் சென்ற பின்னர் அது நாயைச் சந்தித்தது."நண்பனே! எதிர்மறை உணர்வுகளை சேகரிக்கவே கூடாது. அவை மிகச் சிறியவை போலத் தோற்றமளித்தாலும் அதன் பாரம் மிகவும் பெரிது. அது மட்டுமல்ல, அவை என்னுடைய சக்தியை உறிஞ்சி விட்டன! ஒவ்வொன்றாக அவற்றைக் கழட்டி விட கழட்டி விட எனது ஆற்றலும் வேகமும் முன்பை விடப் பல நூறு மடங்கு பெருகி விட்டது. விண்ணையே என்னால் இப்போது தொட முடிகிறது. மனிதர்களும் இது போன்ற ஏமாற்றம், சோகம், கோபம், பொறாமை, பேராசை என்ற உணர்வுகளைச் சுமக்காமல் அவ்வப்பொழுது இவற்றைக் கழட்டி விட்டால், அவர்களும் விண்ணைத் தொடும் சாதனைகள் பல புரியலாம் அல்லவா!" அகந்தையை அகற்றி உங்கள் பணியை செவ்வனே தொடங்குங்கள்.


கருத்துகள் இல்லை:

CINEMA TALKS - SHARK BOY AND LAVA GIRL MOVIE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

  மேக்ஸ் என்ற பத்து வயது சிறுவன், தனிமையும் பள்ளியில் துன்புறுத்தலையும் சந்திக்கிறான். அதிலிருந்து தப்பிக்க, அவன் பிளானெட் ட்ரூல் என்ற கனவுல...