ஒருநாள் வயலில் ஏர் உழுது விட்டு வரும் போது தகதகவென ஜொலித்த பறவை ஒன்று அங்கிருந்த மரத்தில் அமர்ந்திருந்தது. அதைப் பார்த்த விவசாயி, “இந்தப் பறவை நம் வயலைக் காக்கும் தேவதையாக இருக்கக் கூடும். இத்தனை நாள் நாம் இதை வணங்காமல் போனதால்தான் நம்முடைய வயலில் விளைச்சல் பெருகவில்லை. இன்று முதல் இதை நாம் வணங்குவோம்” என்று தீர்மானித்தான். “எனது வயலைக் காத்து வரும் தேவதையே! இவ்வளவு நாட்கள் உன்னைக் கவனிக்காமல் இருந்ததற்காக என்னை மன்னித்துவிடு. உனக்கு என் வீட்டில் இருந்து பழங்கள் எடுத்து வந்துள்ளேன். சாப்பிட்டு என்னை ஆசீர்வதிப்பாயாக,” என்று கூறி பாத்திரத்தை வைத்து விட்டுச் சென்றான் விவசாயி. மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பாத்திரத்தில் ஒரு தங்க இறகு இருந்தது. மகிழ்ச்சியுடன் அதை எடுத்துச் சென்றான் விவசாயி. நாள்தோறும் மாலை வேளைகளில் விவசாயி பாத்திரத்தை வைத்துவிட்டு வருவான். மறுநாள் காலையில் ஒரு தங்க இறகு இருக்கும். இவ்விதம் மகிழ்ச்சியாகக் காலந்தள்ளிக் கொண்டிருந்த விவசாயி ஒருநாள் வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. தனது மகனைக் கூப்பிட்டு அவனிடம் பறவைக்கு பழம் வைத்து விட்டு வருமாறு கூறினான். விவசாயி மகனும் தந்தை சொல்லியவாறே அன்று மாலை பழங்களை வைத்து விட்டுச் சென்றான். மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது அந்தப் பாத்திரத்தில் ஒரு தங்க இறகு இருந்தது. அதைப் பார்த்த விவசாயியின் மகன், “இந்தப் பறவையைப் பிடித்து தங்க இறகுகளை வேண்டிய மட்டும் பிய்த்துக் கொள்வோம். எப்படியும் பறவைக்கு தங்க இறகு முளைத்துவிடும். மீண்டும் பிய்க்கலாம்,” என்று நினைத்து அவன் மறுநாள் ஒளிந்திருந்து பறவை பழம் சாப்பிடும் போது பிடித்துக் கொண்டான். அதன் இறகை பிய்க்க முயன்றபோது பறவை அவன் கண்களை குத்தி குருடாக்கி விட்டுச் சென்றது. விவசாயியின் மகன் பேராசையின் காரணமாக பார்வையற்றவன் ஆனான். கிடைப்பதை கொண்டு திருப்தி அடையணும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான்
1 கருத்து:
ஒரு சில மனுஷனுங்க இருப்பாங்க. அவங்க மனசு மொத்தமாவே ஏதாவது ஒரு கருத்து மொத்தமாகவே சூழ்ந்து இருக்கும். அவனுங்களை எப்பவுமே மாத்தவே முடியாது. வேற ஏதாவது ஒருத்தர் வந்து உண்மைய சொல்லி திருத்தணும்னு நினைச்சா முடியாது. அவனுங்க அவனுங்க இன்னொருத்தர் சொல்லறாத காது கொடுத்து கூட கேட்க மாட்டாங்க.
கருத்துரையிடுக