Wednesday, July 16, 2025

ARC-G2-030

 



ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்போட்ட பூனைமாதிரி ஒருவன் இங்குமங்கும் சுற்றிக்கொண்டிருந்தான். மாறுவேடத்திலிருந்த மன்னர் அவனருகே சென்று யாரப்பா நீ? என கேட்டார். நான் ஒரு திருடன். அரண்மனையில் திருட வந்திருக்கேன் என்றான் அவன். சரி... நானும் இதே அரண்மனையில் சில காலம் பணியாற்றியவன் என்பதால் அரசின் கஜானா இருக்குமிடத்தை உனக்கு சொல்கிறேன். எனக்கு என்ன தருவாய்? என பேரம் பேசினார் மன்னர். கிடைப்பதில் சரி பாதி உனக்கு தருகிறேன் என்றான் திருடன். அதை ஒப்புக்கொண்ட மன்னர் திருடனுக்கு அரசு கஜானா இருக்கும் இடத்தையும் அதை திறக்கும் விதத்தையும் விளக்கி கூறினார் மன்னர். திருடச்சென்ற திருடன் இரண்டு விலை உயர்ந்த ரத்தினக் கல்லுடன் வந்து பேசியபடி மன்னனுக்கு ஒன்றை கொடுத்தான். இரண்டு ரத்தினக்கல் மட்டும் தான் இருந்ததா? என கேட்டான் மன்னன். இல்லை. மூன்று ரத்தினங்கள் இருந்தது. அதில் ஒன்றை அங்கேயே விட்டு விட்டு இரண்டை மட்டும் எடுத்து வந்தேன் என்றான் திருடன். ஏன்? என்றான் மன்னன். இந் நாட்டு மன்னன் பாவம். மிகவும் நல்லவன். ஏதோ வயிற்று பிழைப்புக்கு திருடுகிறேன். அரச கஜானாவை துடைக்கக்கூடாது என்றான் திருடன். திருடனிடம் தனது ஒரு பங்கு ரத்தினக்கல்லை பெற்றுக் கொண்டு அரண்மனைக்கு படுக்கச்சென்றான் மன்னன். என்றாலும் மன்னனுக்கு திருடன் மேல் சின்ன சந்தேகம். ஒரு வேளை இவன் 3 ரத்தினக்கல்லையும் திருடிவிட்டு 2 தான் திருடியதாக பொய் சொல்லி இருப்பானோ? என்று. கஜானாவை போய் பார்த்தார். திருடன் சொன்னது போல் ஒரு ரத்தினக்கல் அங்கு இருந்தது. தூங்கச் சென்றுவிட்டான் மன்னன். பொழுது விடிந்தது. சேனாதிபதி அலறிக்கொண்டே ஓடிவந்தார். வழியில் மந்திரி அவனை இடைமறித்து என்ன ஆச்சு என்றார். அரச கஜானாவில் 2 ரத்தினக்கல் திருடு போய் விட்டது என மந்திரியிடம் தெரிவித்தார். திருடுபோன விஷயம் உமக்கும் எனக்கும் மட்டுமே தெரியும். அதனால் 3 ரத்தினங்களும் திருடு போய் விட்டது என சொல்வோம். அந்த ஒன்றை விற்று நாம் இருவரும் பங்கிட்டுக்கொள்வோம் என்றார் மந்திரி. சேனாதிபதி அதற்கு சம்மதித்தார். அவர்களது திட்டப்படி 3 வது கல்லும் எடுக்கப்பட்டது. வழக்கம் போல் மன்னரின் தர்பார் கூடியது. சேனாதிபதி அரண்மனை கஜானாவில் இருந்து 3 விலை உயர்ந்த ரத்தினக்கல் திருடுபோய்விட்டது. திருடிய கள்வனுக்கு தக்க தண்டனையை அரசர் வழங்கவேண்டும் என்றார். மன்னனும் ஏதும் அறியாதவர்போல் அது தான் சரி என்றார். கேடி லிஸ்டில் இருந்த திருடர்கள் அனைவரும் தேடி கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் சங்கிலியால் கட்டி இழுத்துவரப்பட்டனர். ஒவ்வொரு திருடனாக பார்த்து முதல் நாள் இரவு தன்னிடம் பேசிய திருடனை அடையாளம் கண்டான் மன்னர். மன்னர் சொன்னார்.... திருடன் தானாகவே திருட்டை ஒப்புக்கொண்டால் கசையடியில் இருந்து தப்பிக்கலாம்... என்றார். திருடியவன் உண்மையை ஒப்புக்கொண்டு.... அரசே நான் திருடியது இரண்டு மட்டுமே. அதில் ஒன்றை நேற்று எனக்கு கஜானாவிற்கு வழிசொன்ன ஒரு வழிப்போக்கனுக்கு பங்கு கொடுத்து விட்டேன். என்னிடம் உள்ள மீதி ஒன்று மட்டும் இதோ இருக்கிறது பாருங்கள் என சொல்லி மன்னனிடம் கொடுத்தான். திருட்டு நாய். மூன்று ரத்தினக்கல்லையும் திருடிவிட்டு பொய் சொல்றதை பாருங்கள் மன்னா? என வாளை ஓங்கினான் சேனாதிபதி. மன்னர் சொன்னார். திருடன் சொல்வதே சரி. அவன் சொன்ன வழிப்போக்கன் நான் தான் எனச் சொல்லி 2 வது ரத்தினக்கல்லை காட்டினார். 3 வது ரத்தினக்கல்லை திருடியவன் யார் என்பதே இப்போதைய கேள்வி என்றான் மன்னன். வேறுவழியின்றி சேனாதிபதியும் மந்திரியும் உண்மையை ஒப்புக்கொண்டு தங்களை மன்னிக்கக்கோரினார்.

No comments:

ARC-G2-030

  ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...