Wednesday, July 23, 2025

ARC-G2-040

 


ஒரு சமயம் அரசவைக்கு சென்ற பண்டிதன் ஒருவன் அரசனிடம் “நான் கல்வியில் சிறந்தவன். என்னை உங்கள் நாட்டில் உள்ளவர் யாரேனும் வாதத்தில் தோற்கடித்தால் நான் நாட்டை விட்டு சென்று விடுவேன். நான் வாதத்தில் வெற்றி பெற்றால் அரச பதவியை நீங்கள் எனக்கு தர வேண்டும். இது தான் போட்டி. போட்டிக்கு நீங்கள் தயார் தானே?” என சவால் விட்டான். அரசனும் போட்டிக்கு தயார் என அறிவித்து விட்டான். தனது அரசவையில் இருந்த கல்வியில் சிறந்தவர்களிடம் “நாளை பண்டிதனுடன் வாதத்திற்கு தயார் ஆகுங்கள். நாம் தோற்றுவிட்டால் பண்டிதனுக்கு நாம் அடிமையாகி விடுவோம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்” என்று கூறினான். போட்டி பற்றிய அறிவிப்பை நாடு முழுவதும் அறிவிக்கச் செய்தான் அரசன் அரண்மனை சேவகனின் பத்து வயது மகன் இவ்வறிப்பைக் கேட்டான். நாளை நாமும் அரண்மனைக்குச் செல்லுவோம் என்று மனதில் தீர்மானித்தான். மறுநாள் அரசவையில் பண்டிதன் கல்வியில் சிறந்தவர்களிடம் வாதிட்டு அவர்களை வென்றான். பின் அரசனிடம் “உங்கள் நாட்டில் என்னை வெல்ல எவருமே இல்லை. ஆதலால் நீங்கள் அரச பதவியை எனக்கு தாருங்கள்” என்றான். அப்போது சேவகனின் மகன் “என்னிடம் உள்ள கேள்விக்கு நீங்கள் பதில் கூறுங்கள். பின் அரச பதவியைப் பெறுங்கள்” என்றான். அவனைப் பார்த்ததும் பண்டிதன் ஆணவத்துடன் “உங்கள் நாட்டில் கல்வியில் சிறந்தோர் எல்லோரும் என்னுடன் வாதில் தோற்றனர். நீயோ சிறுவன். உன்னையும் நான் வெல்வேன். உன் கேள்வியைக் கூறு” என்றான். சேவகனின் மகனும் தனது ஒரு கையில் மணலினை எடுத்துக் கொண்டு அதனைப் பண்டிதனிடம் காட்டி “என் கையில் எவ்வளவு மணல் உள்ளது எனக் கூறுங்கள்?” என்றான். இதனைக் கேட்ட பண்டிதன் சிரித்தவாறே “சிறுவனே மணலினை எண்ண முடியாது என்பது உனக்கு தெரியாதா. கேள்வியின் மூலமே நீ சிறுபிள்ளை என்பதை நிரூபித்துவிட்டாய். இக்கேள்விக்கு எல்லாம் பதில் கிடையாது.”என்று கூறினான். சேவகனின் மகனும் “கேள்விக்கான விடையை நான் கூறுவேன். நீங்கள் உங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு இங்கிருந்து செல்ல வேண்டும்.” என்றான். “சரி கூறு பார்ப்போம்” என்றான் பண்டிதன். “ஐயா என் கையில் ஒரு கையளவு மணல் உள்ளது. இதனைக் கூட உங்களால் சரியாகக் கூற முடியவில்லை. தோல்வியை ஒப்புக் கொள்வீர்கள் தானே” என்றான் சேவகனின் மகன். பண்டிதன் எதுவும் கூறாமல் நாட்டை விட்டு வெளியேறினான்.

No comments:

ARC-G2-053

   ஒரு நாட்டில் ஒரு பேச்சாளர் இருந்தார். அவர் பேச்சைக் கேட்க கூட்டம் அலைமோதும். அவர் பேச்சைக் கேட்டாலே மனதில் தன்னம்பிக்கை பொங்கி எழும். அவர...