Wednesday, July 16, 2025

ARC-G2-029

 



ஒரு ராஜா இருந்தாராம். அவரு ஒருநாள் மாறுவேஷம் போட்டுக்கிட்டு நகர் சோதனைக்காகப் புறப்பட்டார். சிறைச்சாலையிலே கைதிகள்லாம் எப்படி இருக்காங்கன்னு பார்த்திட்டு வரலாம் ன்னு அந்தப் பக்கமா போனார். பல கைதிகள் அடைபட்டுக் கிடந்தாங்க. அதுல ஒரு ஆளைக் கூப்பிட்டு, நீ ஏன் இந்த இடத்துக்கு வந்து சேர்ந்தே?"ன்னு விசாரித்தார் - ராஜா! "நான் ஒரு வாடகை வீட்டிலே குடியிருந்தேன். அதைக் காலி பண்ணச் சொன்னாங்க. வேறே வீடு கிடைக்கலே. அதனாலே காலி பண்ணாம இருந்தேன். அதுக்காக எம்பேர்லே கேஸ் போட்டு ஒரு வருஷம் உள்ளே தள்ளிட்டாங்க!" அப்படின்னான் அந்த ஆளு! ராஜா இன்னொரு கைதியைக் கூப்பிட்டு "நீ எப்படி இங்கே வந்தே"ன்னு கேட்டார். "என்பேர்லேயும் தப்பு ஒண்ணும் இல்லீங்க! ஒருநாள் தெருவுலே நடந்து போய்க்கிட்டிருந்தேன். வழியிலே ஒரு தங்கச் சங்கிலி கிடந்தது. அனாதையா கிடந்துது. அதனாலே அதை நான் எடுத்துக்கிட்டேன். அதை விற்கிறதுக்காகப் போனேன். அந்த இடத்துலே என்னைப் பிடிச்சிட்டாங்க! திருடினேன்னு சொல்லி தண்டனையும் குடுத்துட்டாங்க!" அப்படின்னான் அவன். ராஜா அடுத்தபடியா இன்னொரு ஆளைக் கூப்பிட்டு விசாரித்தார். "ஐயா! எங்க ஊர்லே கணக்கு வழக்கு பார்த்துகிட்டு க்ஒரு ஆள் இருந்தார். அவரு அடிக்கடி என்கிட்டே ஏதாவது காசு வாங்கிட்டே இருப்பாரு. நானும் அப்பப்ப கையில கிடைச்சது ஏதாவது குடுத்துக் கிட்டுத்தான் வந்தேன். ஒரு சமயம் கேட்டாரு நாள் கையிலே இல்லேன்னு சொன்னேன். அவருக்குக் கோவம் வந்துட்டுது. அன்னைக்கு ராத்திரி அவரு வீட்டு வைக்கப் போரு பத்திக்கிட்டு எரிஞ்சிட்டுது. அதை நான் தான் கொளுத்தினேன்னு சொல்லிபுட்டார். எல்லாரும் நம்பிட்டாங்க! அதனாலேதான் நான் இங்கு வர்றாப் போல ஆயிட்டுது!”ன்னான் அந்த ஆளு!” ராஜா சளைக்கலே! இன்னொரு ஆளையும் கூப்பிட்டு விசாரிச்சார். "ஐயா! நான் வேற ஒண்ணும் பண்ணலே. ஒரு சின்ன கோயில் கட்டலாம்ன்னு நினைச்சி பலபேருகிட்டே நன்கொடை வசூல் பண்ணினேன். பணம் கொடுத்தவங்கள்லாம் இன்னோண்ணையும் குடுத்துட்டாங்க. அதாவது எம்பேர்ல புகாரையும் கொடுத்துட்டாங்க! - வசூல் பண்ணின பணத்தையெல்லாம் சாப்பிட்டுப் டேன்னு சொல்லி என்னை இங்கே கொண்டாந்து விட்டுட்டாங்க!" அப்படின்னான் அவன்! இப்படி எல்லாருமே தான் ஒரு தப்பையும் பண்ணலேன்னும் - அநியாயமா சிறையிலே கொண்டாந்து அடைச்சிட்டாங்கன்னும் சொல்லிக்கிட்டிருந்தாங்க. ராஜா கடைசியா வேற ஒரு ஆளுகிட்டே போனார். "நீ என்ன காரணத்துக்காக ஜெயிலுக்கு வந்தே?"ன்னார். “ஐயா. நான் ரொம்ப ஏழை! ஏழு பிள்ளைங்க! வயசான அப்பா. அம்மா. இருக்காங்க. வேலை செஞ்சும் போதுமான கூலி கிடைக்கலே! சில சமயத்துலே வேலையும் கிடைக்கறதில்லே. பசிக்கொடுமை. தாங்க முடியலே! அதனாலே செய்யக் கூடாத ஒரு காரியத்தைச் செஞ்சுட்டேன்! ஒரு செல்வந்தர் வீட்டுலே திருடிப்புட்டேன்! திருடுறது பெரிய குற்றம்! புத்திகெட்டுப் போயி அப்படி நடந்துகிட்டேன்! அதனாலே பிடிபட்டேன்! நியாயப்படி எனக்கு மூணு வருஷம் சிறைத்தண்டனை கிடைச்சுது. அதனாலே நான் இங்கே வர்றதுக்கு வேறே யாரும் காரணம் இல்லே! நான் தான் காரணம்| செஞ்ச குற்றத்தை நினைச்சி நான் தினமும் அழுதுகிட்டிருக்கேன்”. அப்படின்னான் அந்த ஆள்! ராஜா உடனே சிறை அதிகாரியைக் கூப்பிட்டார் வேகமா. அவர் வந்து நின்னார். “இதோ பாருங்க! இங்கே வந்திருக்கிறவங்க யாருமே ஒரு குற்றமும் பண்ணாதவங்க! இந்த ஒரு ஆள் மட்டும் தான் குற்றம் பண்ணினவன். நல்லவங்க பலபேரு இருக்கிற இந்த இடத்துலே ஒரு பொல்லாதவன் இருக்ககூடாது! அதனாலே உடனே இவனை விடுதலை செய்து வெளியிலே அனுப்பிச்சுடுங்க!"ன்னு உத்தரவு போட்டார். தவறை உணர்ந்தவன் வெளியிலே வந்துட்டான். செய்த குற்றத்தை ஒப்புக் கொள்றதுங்கறது ஒரு பெரிய குணம். அதுக்குத் தைரியமும் வேணும்- மனப்பக்குவமும் வேணும்! மனிதனுக்கு அந்த மனப்பக்குவமும் வந்துவிட்டால் அதன் பிறகு எல்லாமே நன்மை தான்.

No comments:

ARC-G2-030

  ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...