Monday, December 30, 2024

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !



புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள். இருவரும் உணவு உண்டபிறகு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர் அந்நேரம், "அப்பா. அப்பா. இந்தப் புது வருடத்துக்கு எனக்கு ஏதும் பரிசு இல்லையா?” என்று கேட்டாள் மகள். "ம்ம். ம். கண்டிப்பா உண்டுடா செல்லம், உனக்கு என்ன வேணும் சொல்லு?” கேட்டார் அப்பா. அப்பாவின் கைகளைப் பிடித்தவாறே, "எனக்குப் புது ஷூ வாங்கித்தாங்கப்பா, அதுவும் பாட்டா ஷூ வேணும். ” என்றாள் "நாளைக்கு வாங்கித் தர்றேன். இப்ப போய் தூங்கும்மா. ” என்றார் அப்பா. மகள் கேட்டபடியே, புத்தாண்டு அன்று காலை புது ஷூ வாங்கிக் கொடுத்தார் அப்பா. மிகுந்த மகிழ்ச்சியோடு, புத்தாண்டுப் பரிசைப் பெற்றுக் கொண்டாள் மகள். சிறிது நேரம் கழித்து, அந்தப் புது ஷூவை பரிசுப் பொருளாக வண்ணத்தாளை வைத்துக் கட்டிக் கொண்டிருந்தாள். இதைக் கவனித்த அப்பா, "யாருக்கு இந்தப்பரிசைக் கொடுக்கப் போற?” என்று கேட்டார். "அது வந்துப்பா. அடுத்த தெருவுல இருக்கிற ஒரு பொண்ணுக்குத் தரப் போறேன். பாவம்ப்பா அந்தப் பொண்ணு! அவகிட்ட ஒரே ஒரு ஷூதான் இருக்கு. அதவும் கிழிஞ்சிருக்குப்பா. தன்னோட கிழிஞ்ச ஷூவை யாராவது பார்த்துவிடுவாங்கன்னு, பொண்ணு மறைச்சு மறைச்சு கஷ்டப்படுறதைப் பல நேரம் கவனிச்சிருக்கேன். அதனாலதான் புத்தாண்டுப் பரிசா புது ஷூ கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்று தயக்கத்தோடு சொன்னாள் மகள். "ரொம்ப நல்ல காரியம். கண்டிப்பாக செய். ஆனா, என்கிட்டே பரிசு உனக்குன்னு ஏன் பொய் சொல்லிக் கேட்டே?” என்று அப்பா செல்லக் கோபத்துடன் கோட்டார். "அப்பா, ஒருவேளை நான் சொல்லியிருந்தா, நீங்க அடுத்த பொண்ணுக்குத்தானே என்று மலிவான விலையில் வாங்கி வரக்கூடும். அதனாலதான் எனக்கு வேணும்னு பொய் சொன்னேன். ” என்று தைரியமாகச் சொன்னாள் மகள். என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்துப் போனார் அப்பா! புத்தாண்டுக்காகத் தயார் செய்திருந்த உணவுப்பண்டங்களை ஒரு கை பார்த்தபின், தன்னுடைய புத்தாண்டுப் பரிசை கொடுப்பதற்காக கிளம்பிச் சென்றாள் மகள். ஆனால் போன சில நிமிடங்களிலேயே திரும்பி வந்தாள். இதைக் கவனித்த அப்பா, "என்னமா, அந்த பொண்ணு வீட்டுல இல்லையா? அதுக்குள்ளேயே வந்திட்டியே?” என்றார் அப்பா. "நான் அந்த பொண்ணுகிட்டே பரிசு கொடுக்கலைப்பா. அவுங்க வீட்டுக் கதவுகிட்ட வெச்சிட்டு ஓடி வந்துட்டேன். ” என்றாள் மகள். ""ஏன், அந்த பொண்ணு கூட சண்டையா? இல்லை கொடுத்தா வாங்க மாட்டாளா?” என்று அப்பா கேட்க, "நான் ஒருவேளை அந்தப் பரிசைக் கொடுத்தா அந்த பொண்ணு வாங்கிக் கொள்வாள். ஆனால் அதுக்குப் பிறகு என்னைப் பார்க்கும்போதெல்லாம் நன்றியுணர்ச்சியோடு பார்ப்பாள். இயல்பாப் பழகமாட்டா, ஒரு உதவியாளனாகத்தான் என்னைப் பார்ப்பாள். கடவுள் உண்டியலில் போடும் காசுக்கு விளம்பரம் தேவையா?” என்றாள் பிஞ்சுக் குரலில் மகள். பிறருக்கு உதவ வேண்டுமென்று எண்ணும் தனது பன்னிரண்டு வயது மகளைப் பார்த்து நெகிழ்ந்து போனார் அப்பா! - இன்னொருவருடைய கஷ்டத்தை புரிந்துகொண்டு உதவி செய்வது எப்போதுமே ஸ்பெஷல்லான விஷயம் இல்லையா ? நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் ?

No comments:

ARC - 023 - மலிவாக நடந்துகொள்ளும் மனிதர்கள் !

  ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி என்று ஒருவர் சென்று இருந்தார்! கணவன் மனைவியிடம் காபி போட்டு கொண்டுவருமாறு சொன்னான். இங்கே காபி பொடியும்...