புதன், 1 ஏப்ரல், 2026

நமது வாழ்க்கையின் மோட்டிவேஷன் #2

 


திரையில் நாம் பார்க்கும் பல கதைகளில் நாயகர்கள் வேலைக்கே செல்லாமல் ஊர் சுற்றுவார்கள், ஆனால் கையில் எப்போதும் விலை உயர்ந்த போன் இருக்கும், பிராண்டட் சட்டைகளை அணிந்திருப்பார்கள். "காதலே உலகம்" என்று ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்குத் திடீரெனப் பயணம் செய்வார்கள்; ஆனால் அந்தப் பயணத்திற்கான டிக்கெட் பணம், தங்குமிடச் செலவு, இடையில் பசிக்கும்போது சாப்பிடும் உணவிற்கான காசு எங்கே இருந்து வருகிறது என்ற கேள்விக்கே அங்கு இடமிருக்காது. நிஜ வாழ்க்கையில் ஒரு மணிநேரம் நிம்மதியாகக் கழிக்க வேண்டுமென்றால் கூட, நாம் அமர்ந்திருக்கும் இடத்திற்கான வாடகை, மின்சாரக் கட்டணம் அல்லது குறைந்தபட்சம் ஒரு டீ குடிக்கவாவது பணம் தேவைப்படுகிறது. சினிமாவில் வரும் ஏழை நாயகன் கூட அழுக்கற்ற உடையில் வலம் வருவார், ஆனால் எதார்த்தத்தில் மாதக்கடைசியில் வாடகை கொடுக்க முடியாமல் திணறுபவனுக்குத் தான் தெரியும், ஒவ்வொரு ரூபாயும் எவ்வளவு பெரிய போராட்டம் என்று. திரையில் காட்டப்படும் அந்த "பணம் தேவையற்ற மாய உலகம்" பல இளைஞர்களைத் திட்டமிடல் இல்லாத வாழ்க்கைக்குத் தள்ளுகிறது, இறுதியில் எதார்த்தம் அவர்களை அறைந்து உண்மையைச் சொல்லும்போது தான் திகைத்து நிற்கிறார்கள்.

மற்றொரு கொடுமை என்னவென்றால், சினிமாவில் காட்டப்படும் வாழ்வாதாரச் சிக்கல்கள் மிக எளிதாகத் தீர்க்கப்படுவது போலச் சித்தரிக்கப்படுவதுதான். ஒரு பாடலில் நாயகன் கோடீஸ்வரன் ஆகிவிடுவான் அல்லது ஒரு சண்டைக் காட்சியில் வில்லனை வீழ்த்தியதும் அவனது கடன் பிரச்சினைகள் எல்லாம் மறைந்துவிடுவது போல் காட்டிவிடுவார்கள். ஆனால் நிஜத்தில், ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதன் தன் வாழ்நாள் முழுவதையும் ஒரு வீட்டுக் கடனை அடைப்பதிலேயே கழித்துவிடுகிறான். சினிமாவில் ஒருவன் தன் காதலிக்காக வேலையை உதறிவிட்டு ஓடி வரும்போது அது "வீரம்" என்று போற்றப்படுகிறது; ஆனால் நிஜத்தில் அப்படிச் செய்தால் அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாமல் அந்தக்காதல் கசந்து போகும் என்பதுதான் கசப்பான உண்மை. எதார்த்தத்தில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு பொருளாதாரப் போர் நடந்து கொண்டிருக்கிறது. மருத்துவச் செலவு, கல்விக்கட்டணம், போக்குவரத்து எனப் பணமில்லாமல் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாத உலகில், சினிமாவின் அந்த "பணத்தைப் பற்றிப் கவலைப்படாத" லாஜிக் என்பது வெறும் போதை மருந்து போன்றது; அது தற்காலிகமாக மகிழ்ச்சியைத் தந்தாலும், இறுதியில் நிஜ வாழ்வின் தேவைகள் நம்மைப் பலவீனர்களாகவே உணரச் செய்கின்றன

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - இப்படியும் ஒரு வியாபார பொருளா ?

  சமீபகாலமாக சமூக வலைதளங்களிலும், சில சில்லறை விற்பனை கடைகளிலும் மொபைல் ஃபோன்களின் பின்புறம் ஒட்டிக்கொள்ளும் "மேஜிக் ஸ்டிக்கர்கள்"...