நம்முடைய மூளைக்கு எப்போதுமே சாதாரண எதார்த்த வாழ்க்கையை விட, கொஞ்சம் சினிமாத்தனமான கற்பனை உலகத்தில்தான் அதிக ஈடுபாடு. அதற்கு அது பயன்படுத்தும் ஆகச்சிறந்த ஒரு கருவி நம்முடைய இயர்போன்! மொபைலில் ஒரு பாடலை ‘ப்ளே’ செய்துவிட்டு அதை காதில் மாட்டும் அந்த மில்லிசெகண்டில், நம்முடைய சாதாரண அன்றாட வாழ்க்கை அப்படியே ஒரு பான்-இந்தியா திரைப்படமாக மாறிவிடுகிறது. நாம் வெறும் பாடலைக் கேட்பதில்லை; அந்தப் பாடலின் இயக்குநராக, ஒளிப்பதிவாளராக, எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதன்மைக் கதாபாத்திரமாகவே (Hero/Heroine) மாறிவிடுகிறோம்! பேருந்திலோ அல்லது காரிலோ ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து ஒரு சோகப் பாடலைக் கேட்கும்போது இந்த அவதாரம் வெளிப்படும். வெளியே வெயில் 40 டிகிரியில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும், ஆனால் நம் மூளையோ மழையில் நனைந்தபடி ஜன்னல் கண்ணாடியில் வழியும் நீர்த்துளிகளைப் பார்ப்பது போல ஒரு ஃபீலை உருவாக்கும். ஏதோ ஒட்டுமொத்த உலகத்தின் துரோகத்தையும் நாமே தாங்குவது போல, முகத்தை 45 டிகிரி கோணத்தில் திருப்பி, தூரத்து வெட்டவெளியைப் பார்த்து உருகி அழுதுகொண்டிருப்போம். இதுவே ஒரு வேகமான குத்துப்பாட்டோ அல்லது ஒரு மாஸ் ஹீரோவின் 'தீம் மியூசிக்கோ' (Theme Music) ஓடும்போது நடக்கும் கூத்து. சும்மா தெருவில் நடந்து காய்கறி வாங்கப் போனால் கூட, நம்முடைய நடை தானாகவே 'ஸ்லோ-மோஷன்' (Slow-motion) மோடுக்கு மாறிவிடும். நம்மைச் சுற்றி நடப்பவர்கள் எல்லாரும் ஏதோ நமக்குக் கைதட்டும் ரசிகர்களாகவோ அல்லது நம்மிடம் அடி வாங்கக் காத்திருக்கும் வில்லன்களாகவோ நம் மூளைக்குக் காட்சியளிப்பார்கள். காலரைத் தூக்கிவிடத் தோன்றும்! இந்த ஆஸ்கார் விருது வாங்க வேண்டிய பிரம்மாண்டமான தியேட்டர் தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ், ஒரே ஒரு நொடியில் தரைமட்டமாகும். அது—எதிர்ல வர்ற வண்டி ஹாரன் சத்தமோ, அல்லது கண்டக்டர் வந்து "தம்பி... டிக்கெட் எடுப்பா!" என்று சில்லறையை ஆட்டும்போதோதான். அந்த நொடிக் கணம், அந்தப் பிரம்மாண்ட உலகத்திலிருந்து நாம் அப்படியே தூக்கி எறியப்பட்டு, "ஆமா... நாம் சாதாரண மனிதன்தான்" என்கிற எதார்த்த பூமிக்கு வந்து சேருவோம். உளவியலில் இதற்குப் பெயர் 'எஸ்கேபிசம்' (Escapism - எதார்த்தத்தில் இருந்து தப்பித்தல்) மற்றும் 'நரேட்டிவ் ஐடென்டிட்டி' (Narrative Identity). மனித மனம் எப்போதுமே தன்னைத் தன் கதையின் முதன்மைக் கதாபாத்திரமாகப் பார்க்கவே விரும்பும். நாம் கேட்கும் இசை, நம் மூளையின் உணர்ச்சிப் பகுதியைத் (Limbic system) தூண்டி, அந்தப் பாடலின் மூடுக்கு (Mood) ஏற்ப நம்மை ஒரு காட்சியை உருவாக்க வைக்கிறது. அன்றாட வாழ்க்கையின் சலிப்பான, ஒரே மாதிரியான ஓட்டத்திலிருந்து (Routine life) தப்பித்து, தங்களை ஒரு ராக்ஸ்டாராகவோ அல்லது ஒரு காவிய நாயகனாகவோ கற்பனை செய்து கொள்வது, மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான மூளையின் ஒரு ரகசிய 'ஸ்ட்ரெஸ் பஸ்டர்' (Stress Buster) விளையாட்டுதான் இந்த இயர்போன் சினிமா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக