மனிதன் தெய்வமாகலாம். இது வெளிப்படையாக எளிமையானதாகத் தோன்றினாலும், அதன் உள்ளார்ந்த அர்த்தம் மிக ஆழமானது. பலர் "மனிதன் தெய்வமாக முடியுமா? அர்த்தமற்றது!" என்று சொல்லக்கூடும். பொதுவாக, தெய்வம் என்றால் நம் மனதில் தோன்றுவது வானளாவிய உருவம், எண்ணற்ற நகைகள், தெய்வீக புன்னகை, தலைக்கு பின்னே ஒளிவட்டம், கேட்டதை வழங்கும் கற்பக விருட்சம் போன்ற கற்பனைகள். ஆனால் உண்மையில், தெய்வம் என்பது இறைதன்மை. அது உருவமற்றது, சூன்யம், ஒன்றுமில்லாத ஒன்று. அன்பும் கருணையும் நிறைந்த சக்தி என்று ஞானிகள் கூறுவர். அந்த நிலையை நோக்கி நம் எண்ணங்கள் பயணித்தால், நம்முள் மாற்றம் நிகழ்ந்து, நம்மை நல்வழியில் நடத்தும் அரூப சக்தியாக அது வெளிப்படும். நம் எண்ணம், செயல் ஆகியவற்றின் அடிப்படையில் சரியான விளைவுகளை அளிக்கும் நீதிமான் அதுவே இறைவன். அன்பும் கருணையும் எங்கு பொங்கி வழிகிறதோ, அங்கு அவர் நுண்ணிய வடிவில் இருப்பார். பசியால் வாடும் ஒருவருக்கு கருணையோடு உணவு அளிப்பவன் கடவுள். யாருமற்ற அநாதைகளுக்கு வழிகாட்டி உதவுபவன் கடவுள். துன்பம், நோய் கூறும் ஒருவருக்கு கருணையோடு துணை நிற்பவன் கடவுள். வாடிய பயிரைக் கண்டு துன்பப்படும் மனம் வள்ளலார் சொன்னது போல அதுவும் கடவுள். பொருளால் உதவ முடியாத நிலையிலும், "இந்த முயற்சி நல்ல முறையில் நிறைவேறி அனைவருக்கும் பயன் தர வேண்டும்" என்று மனமார நினைப்பவன் கடவுள். சாலையில் தடுமாறும் முதியவருக்கு ஓடி சென்று உதவுபவன் கடவுள். குழந்தைகளின் புன்னகையில் தன்னை மறந்து, அவர்கள் நலம் பெற வாழ்த்துபவன் கடவுள். உலகில் போர், பகை, அச்சம் இல்லாமல் மக்கள் அனைவரும் செழிப்புடன் வாழ வேண்டும் என்று உளமார நினைப்பவன் கடவுள். தன் உழைப்பால் பெற்றதை அன்போடு பிறருடன் பகிர்ந்து உண்பவன் கடவுள். எங்கே அன்பும் கருணையும் தடையின்றி பெருகுகிறதோ, அங்கெல்லாம் இறைவன் அரூபமாக வெளிப்படுகிறார். "எத்துணையும் பேதமுறா எவ்வுயிரும் தன்னுயிர்போல" என்று வள்ளலார் கூறிய தன்மையை உடையவன் கடவுள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக