Tuesday, January 7, 2025

ARC - 040 - இதுதான் வாழ்க்கையில் மாற்ற முடியாத பிரச்சனை



ஒரு நாட்டின் சக்கரவர்த்தி ஒரு ஞானம் அடைந்த மனிதரை சந்தித்து அவரை தனது நாட்டின் உச்சநீதிமன்ற தலமை நீதிபதியாக இருக்கும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக் கொண்டார். ஏனெனில் அவரைப் போல வேறு யாராலும் நீதி, நெறிகளை நிலைநாட்ட முடியாது என சக்கரவர்த்தி நம்பினார். ஆனால் அவரோ, "நான் அதற்கு சரியான ஆள் கிடையாது" என மறுத்து விட்டார். ஆனால் சக்கரவர்த்தி விடாப்பிடியாக வற்புறுத்தவே, "நான் சொல்வதை நீங்கள் கேட்க மறுக்கிறீர்கள். வெறுமனே ஒரே ஒரு நாள் நான் நீதிபதியாக இருந்தால் போதும், நான் அதற்கு சரியான ஆள் அல்ல என்பதைப் புரிந்து கொள்வீர்கள். ஏனெனில் உங்களது இந்த அமைப்பு முற்றிலும் தவறானது ஆகும். அடக்கத்தின் காரணமாக இதை உங்களிடம் நான் முன்னதாகவே சொல்லாமலிருந்தேன். ஒன்று நான் இருக்க வேண்டும் அல்லது உங்களது அரசியல் அமைப்புச் சட்டங்கள் இருக்க வேண்டும். எனவே உங்களது வற்புறுத்தலுக்காக இதை நாம் முயற்சி செய்து பார்ப்போம்" என்றார் ஞானி. முதல் நாள், அந்த நீதிமன்றத்திற்கு, அந்த தலை நகரத்திலேயே மிகப் பெரிய செல்வந்தரின் வீட்டில், கொள்ளை அடித்த திருடன் ஒருவன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டான். வழக்கை விசாரித்த ஞானி, அந்தச் செல்வந்தர் அந்தத் திருடன் ஆகிய இருவருக்கும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை என தீர்ப்பு கூறினார். பதறிப் போன செல்வந்தர், "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் திருட்டு கொடுத்துள்ளேன். நான் எப்படி குற்றவாளி ஆக முடியும்? திருடனுக்கு கொடுத்த அதே கால அளவு நானும் சிறை போக வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயமாகும்? என்று கேட்டார். அதற்கு அந்த ஞானி, " உண்மை! நான் அந்த திருடனுக்கு அநீதி இழைத்து விட்டேன். அந்த திருடனைவிட அதிக காலம் நீங்கள் சிறைவாசம் இருக்க வேண்டும். ஏனெனில் கொடுங்கோல் வேலை வாங்கி குறைவாக சம்பளம் கொடுத்து நீங்கள் அளவுக்கு அதிகமாக பணத்தைச் சேமித்து வைத்துக் கொண்டதால், அநேக மக்களுக்கு அந்தப் பணம் கிடைக்காமல் போய்விட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் ஏழைகளாகவே இன்னும் இருக்கின்றனர். நீங்களோ மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே போகிறீர்கள். உங்களது இந்தப் பேராசை தான் திருடர்களையே உருவாக்கியுள்ளது. நீங்கள் தான் இதற்கு பொறுப்பு. முதல் குற்றவாளியே நீங்கள் தான்" என்றார். அந்தச் செல்வந்தர், "நீங்கள் என்னை சிறைக்கு அனுப்புவதற்கு முன் நான் சக்கரவர்த்தியைப் பார்க்க வேண்டும். உங்கள் தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளது" என்றார். "அது அரசியல் சாசனத்தின் தவறாக இருக்கலாம். அதற்கு நான் பொறுப்பாக முடியாது. போய், சக்கரவர்த்தியைப் பாருங்கள்" என்றார் ஞானி. சக்கரவர்த்தியைப் பார்த்த செல்வந்தர் அவரிடம், " இங்கே பாருங்கள், இந்த ஆளை உடனடியாக இந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அவர் மிகவும் ஆபத்தானவர். இன்று நான் சிறைக்குச் செல்கிறேன். நாளை நீங்களும் சிறைக்கு செல்வீர்கள். நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் இந்த மனிதரை உடனே வெளியேற்ற வேண்டும். அவர் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் அவர் நம்மையெல்லாம் அழித்து விடுவார்" என்று கூறினார். இதைப் புரிந்து கொண்ட சக்கரவர்த்தி, "இந்தச் செல்வந்தர் குற்றவாளி என்றால், அதன் பிறகு நான் இந்த தேசத்தின் மிகப் பெரிய குற்றவாளி ஆகிவிடுவேன் என்னையும் சிறைக்கு அனுப்ப ஞானி தயங்கமாட்டார்" என நினைத்தார். உடனே, ஞானி அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப் பட்டார். அப்போது ஞானி, "நான் அப்பொழுதே உங்களிடம் கூறினேன். நீங்கள் தேவையில்லாமல் எனது நேரத்தை வீணாக்கிவிட்டீர்கள். இந்த தவறான அமைப்பை நடத்திச் செல்வதற்கு உங்களுக்கு ஒரு தவறான ஆள் தான் தேவை" என்று கூறி விடை பெற்றார்.


No comments:

ARC - 063 -