அந்த வீட்டு எஜமானருக்கு கத்தரிக்காய் சாம்பார் மிகவும் பிடித்துப் போனது. சமையல்காரர் கத்தரிக்காய் சாம்பார், கத்தரிக்காய் பொரியல், கத்தரிக்காய் மசாலா என்று போட்டு அசத்தி விட்டார். சுவைத்துச் சாப்பிட்டார் எஜமானர். சமையல்காரர் கூறினார். "பிரபு, காய்களிலேயே உசத்தியானது கத்தரிக்காய்தான். " எஜமானர் கேட்டார், "அது எப்படி?" சமையல்காரர் பதில் சொன்னார். "அதன் தலையில்தானே கிரீடம் இருக்கிறது. " ரசித்து சிரித்தார் எஜமானர். சில நாட்களிலேயே கத்தரிக்காய் சலித்துப்போனது எஜமானருக்கு. அது தெரியாத சமையல்காரர் அதையே வழமைபோல் செய்து வைத்து விட்டார். கோபம் வந்து விட்டது எஜமானருக்கு. "இதெல்லாம் ஒரு காய் என்று வைக்கிறாயே?" என்றார். சமையல்காரர் சொன்னார், "ஆமாம் பிரபு, இருக்கிற காய்களிலேயே மோசமானது கத்தரிக்காய்தான். " எஜமானர் கேட்டார், "அது எப்படி?" பதில் சொன்னார் சமையல்காரர். "அதனால்தானே அதன் தலையில் ஆணி அடித்து வைத்திருக்கிறார்கள். " அசந்து போனார் எஜமானர். "சில நாட்களுக்கு முன்பு இதையே கிரீடம் என்றாய், இப்போது இப்படிச் சொல்கிறாயே?" சமையல்காரர் அமைதியாகச் சொன்னார், "பிரபு, நான் தங்களிடம்தான் வேலை பார்க்கிறேனே தவிர, கத்தரிக்காயிடம் அல்ல! "- பெரும்பாலான நேரங்களில் மற்றவர்கள் விருப்பத்துக்கு ஏற்றது போல பேசுவதை நாம் தெரிந்தே செய்துகொண்டு இருக்கிறோம்.
No comments:
Post a Comment