இட்லி இன்று தமிழ்நாட்டின் அடையாளமாக விளங்கினாலும், அதன் பயணம் மிகவும் சுவாரஸ்யமானது. மொகலாயர்கள், ஆங்கிலேயர்கள் இந்தியா வரும்வரை தமிழர்களின் உணவு முறையில் எண்ணெயில் பொரித்தல், வதக்குதல் போன்ற பழக்கங்கள் இல்லை; அவித்த உணவு, கூழ், களி போன்றவையே பிரதானம். எண்ணெய்யை சூடாக்காமல் அப்படியே பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. உளுந்தங்களி, கேப்பை போன்ற களிகளோடு நல்லெண்ணெய், வெல்லம் சேர்த்து சாப்பிடுவது வழக்கம். தோசை வார்க்கும் பழக்கமும் அப்போது இல்லை. கம்பு, திணை, வரகு, கேப்பை, தேன், கிழங்கு, பழங்கள், பச்சைக் காய்கறிகள் ஆகியவையே அன்றைய உணவுகள். அரச குடும்பங்களுக்கு வந்த வெளிநாட்டு விருந்தினர்களால் சில உணவுகளில் எண்ணெய் சேர்க்கப்பட்டு, அது பொதுமக்களிடம் பரவ பல காலம் பிடித்தது. அவித்த உணவுகளில் புட்டு வகைகள் முதலில் இருந்தன. அரிசிச் சோறு தினசரி சாப்பிடும் பழக்கம் பிற்காலச் சோழர்களின் காலத்தில் தான் வந்தது.
சுதந்திரத்திற்கு முன்பு இட்லிப் பானைகள் வசதியான வீடுகளில் மட்டுமே இருந்தன; கிராமங்களில் இட்லி தீபாவளி போன்ற சிறப்பு நாள்களில் மட்டுமே சமைக்கப்பட்டது. அப்போது ஆலங்குச்சிகளை கட்டி, துணி விரித்து, மாவு ஊற்றி, பெரிய பாத்திரத்தில் வைத்து அவித்ததால் இட்லி வட்டமாக இருக்காது. முறையான இட்லிப் பானைகள் அலுமினிய உபயோகத்திற்கு பின்பே ஏழைகளுக்கு கிடைத்தன. இட்லி எந்த நூற்றாண்டில் தோன்றியது என்ற துல்லிய ஆதாரம் இல்லை. “இட்டவி” என்பதே “இட்லி”யாக மாறியது என்றும், சாளுக்கிய மன்னர்களின் கலாச்சாரம் வந்தபின் தமிழகம் வந்தது என்றும் ஒரு கூற்று உண்டு. கர்நாடகாவில் இன்னும் தனிப்பட்ட இட்லி வகைகள் இருப்பது இதற்கு ஆதாரம். உண்மையில் இட்லி மலேசியா, இந்தோனேசிய உணவு; ராஜேந்திர சோழன் கடாரத்தை வென்றபோது அங்கிருந்து கொண்டு வந்த முறையில்தான் இட்லி அவிப்பது தமிழகம் வந்தது. மதுரை புது மண்டபத்தில் பித்தளை, செம்பு பாத்திர வியாபாரிகள் கூறுவதுபடி, இட்லிப் பானைகள் அதிகபட்சம் 200 ஆண்டுகளுக்குள் தான் உருவானவை. முதலில் பித்தளையில், பின்னர் வெண்கலம், செம்பு ஆகியவற்றில் வந்தன. ஒரு பானையின் விலை சவரன் தங்கம் அளவுக்கு இருந்ததால், அது மண்குடிசை வீடுகளுக்கு எட்டாத ஒன்று.
அக்காலத்தில் இட்லிப் பானைகள் மாளிகைகள், ஜமீன்கள், மிட்டா மிராசுகள் வீடுகளில் மட்டுமே “ஹைடெக்” பாத்திரங்களாக இருந்தன. ரிலையன்ஸ் ₹500 செல்போன் வந்தபின் பொதுமக்கள் கையிலே போன்கள் வந்தது போல, அலுமினிய பானைகள் வந்தபின் தான் இட்லி சாதாரண வீடுகளில் நுழைந்தது. ஆனால் அதற்குப் பிறகு பிரச்சனை உரல்; இட்லி மாவு அரைக்க உரல்கள் தேவைப்பட்டதால், கிராமங்களில் பொது உரல்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு வீடும் முறைப்படி பயன்படுத்த வேண்டியிருந்தது. இதனால் இட்லி ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே சமைக்கப்பட்டது. பெரிய உரல்கள் வீடுகளில் வைக்க இடமில்லாததால், இட்லி அப்போது காஸ்ட்லியான உணவாகக் கருதப்பட்டது. ஓட்டல் கடைகள் வந்தபின் இட்லி தாரளமாகக் கிடைக்க ஆரம்பித்தது. குட்டி உரல்கள் வந்தபின் நகர வீடுகளில் இட்லி பரவியது; கிராமங்களில் கொஞ்சம் தாமதமாக நுழைந்தது. கிராமத்திலிருந்து நகரம் சென்றவர்கள் முதலில் நல்ல ஓட்டலில் இட்லி சாப்பிட வேண்டும் என்பதே ஆசை. நகர்புறங்களில் கூலித் தொழிலாளர்கள், சுமை தூக்குவோர், மார்க்கெட், துறைமுகப் பணியாளர்கள் புழங்கும் இடங்களில் சாலையோர இட்லிக் கடைகள் தோன்றின. பெரும்பாலும் பெண்கள் நடத்தும் இக்கடைகள், தாலியிழந்த பெண்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தன; பராசக்தி படத்தில் கலைஞர் குறிப்பிட்ட அளவுக்கு புகழ் பெற்றன. இன்றும் இட்லிக்காகவே பிரபலமான கடைகள் பல உள்ளன. ஒருகாலத்தில் காஸ்ட்லியான இட்லி, இன்று குறைந்த விலையிலும், கம்பு, கேப்பை, வரகு, திணை, குதிரைவாலி போன்ற இயற்கை உணவுகளாகவும் விற்பனையாகி, தமிழ்நாட்டின் அடையாளமாக மாறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக