Friday, October 4, 2024

GENERAL TALKS - தற்காலிகமான மரியாதை தேவையற்றது !




ஒரு இடத்தில் நமக்கு தற்காலிகமாக மட்டுமே மரியாதை கிடைக்கும் என்றால் அந்த இடத்தில் நாம் இருக்க கூடாது. காரணம் என்றால் தற்காலிகமாக மரியாதை கொடுக்கும் இடங்களில் இருப்பதை விட இல்லாமலே இருக்கலாம் . ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் வெளியூருக்குச் சென்றார். தொடர்ந்து இரண்டு மூன்று நாள்கள் பயணம் செய்ததால் அவர் களைத்துவிட்டார். உடைகளும் அழுக்கடைந்து விட்டன. வழியில் ஒரு ஊரில் சிறிய சத்திரம் ஒன்றில் தங்கி ஓய்வெடுத்து செல்லலாம் என அங்கு சென்றார். அங்கு பராமரிப்பதற்காக இரண்டு வேலைக்காரர்கள் இருந்தனர். செல்வந்தர் தன் அழுக்கான ஆடையுடன் அங்கு சென்றார். அங்கிருந்த வேலைக்காரர்கள் அவரது உடையைக் கண்டு அலட்சியமாக நடத்தினர். சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டார் பின்னர் குளித்துவிட்டு உடையை மாற்றிக் கொண்டார் செல்வந்தர். வெளியே வந்த அவர் ஆளுக்கு ஒரு தங்கக் காசைப் பரிசாக அளித்தார். வேலைக்காரர்களுக்கு ஆச்சரியாமாகிவிட்டது! இவர் பெரிய செல்வந்தர் என்று தெரிந்திருந்தால் அவரை நன்கு கவனித்து உபசாரம் செய்திருக்கலாமே. இன்னும் நிறைய காசுகள் தந்திருப்பாரே என்று நினைத்தனர். ஒரு சில வாரங்கள் கழித்து அந்த செல்வந்தர் வேறொரு வேலை நிமித்தமாக சென்றவர் தன் பணியை முடித்துக்கொண்டு, வழியில் அதே சத்திரத்தில் வந்து தங்கினார். வேலைக்காரர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டனர். வேலைக்காரர்களுக்கு ஒரே சந்தோஷம்! அவருக்கு குளிக்க வெதுவெதுவென்ற வெந்நீர், துவட்டிக்கொள்ள உயர்தரமான துவாலை, உடலில் பூசிக்கொள்ள வாசனை திரவியங்கள் என்று ஏகமாய் உபசரித்து ராஜ உபசாரம் செய்தனர்! அவர் தங்களுக்கு சென்றமுறை தந்ததைவிட அதிக பொற்காசுகள் தருவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் செல்வந்தர் ஆளுக்கு ஒரு செப்புக் காசு மட்டுமே அளித்தார். வேலைக்காரர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாகிவிட்டது. "இவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்கு உபசாரம் செய்ததற்கு இந்த செப்பு காசுதானா பரிசு?" என்று வேலைக காரர்கள் கேட்டனர். அதற்கு செல்வந்தர், ”அன்றைய தினம் நான் உங்களுக்கு அளித்த தங்கக்காசு இன்று நீங்கள் செய்த உபசாரத்திற்கான பரிசு. இன்று நான் கொடுத்தது அன்று நீங்கள் என்னை அலட்சியப்படுத்தி செய்த உபசாரத்திற்கான பரிசு!" என்று கூறியவாறே சென்று விட்டார். வேலைக்காரர்கள் தலைகுனிந்தனர். தோற்றத்தைக் கண்டு யாரையும் எடைபோடக் கூடாது. எந்த பிரதிபலனையும் எதிர்பார்த்து யாரையும் உபசரிக்கக்கூடாது. இது எல்லாமே வாழ்க்கையில் அடிப்படையாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். சிறப்பான விருந்தோம்பல் என்பது கடினமான நேர்த்தியான ஒரு செயல். ஒருவர் நடந்துகொள்ளும் விதமே அவர் எப்படிப்பட்டவர் என்று வெளிச்சம் போட்டு காட்டிவிடும். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். இது எல்லாம் வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடுக்காது. நாம்தான் தெரிந்து நடக்க வேண்டும் !  

No comments:

Post a Comment

GENERAL TALKS - சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் பிளான் போட வேண்டும் !

ஒரு மனிதன் ஜெயிக்க கண்டிப்பாக பிளான் போட வேண்டும். உங்களிடம் சரியான பிளான் மட்டும் இருந்தால் உங்கள் சூழ்நிலை எப்படி உங்களை மட்டமாக மாற்றினால...