ஒரு ஹெச்.ஆர். எக்ஸிக்யூடிவ் பெண் இறந்து எமலோகம் சென்றாராம். அங்கே எமதர்மன் அவரை பார்த்து, “வாழ்த்துக்கள்! நீங்க சொர்க்கம் போக தகுதியானவங்க. ஆனா அதுக்கு முன்னாடி ஒரு நாள் சொர்க்கத்திலும், ஒரு நாள் நரகத்திலும் தங்கி பார்த்து, பிறகு நீங்களே முடிவு பண்ணிக்கணும்” என்றார். அவள், “இல்லை, நான் இப்பவே சொர்க்கத்துக்குப் போறேன். எதுக்கு நேரத்தை வீணாக்கணும்?” என்றாள். எமதர்மன், “இங்குள்ள விதிகள் அப்படித்தான். நீங்க பின்பற்றியே ஆகணும்” என்றார். முதலில் அவள் நரகத்துக்குப் போனாள். ஆனால் அது நரகம் போலவே இல்லாமல் அழகான பூங்காவாக இருந்தது. அங்கே அவளுடைய நண்பர்கள் பலர் இருந்தார்கள். நாள் முழுக்க சிரிப்பு, பேச்சு, மகிழ்ச்சி. சாத்தானும் வந்து அவளுடைய நண்பர்களை அறிமுகப்படுத்தி, இனிமையாகப் பேசினார். அவர் தோற்றமும் கவர்ச்சியாக இருந்தது. அவளுக்கு நரகத்தை விட்டு வரவே மனமில்லை. ஒரு நாள் முடிந்ததும், “சொர்க்கம் எப்படி இருக்கும்னு போய் பார்ப்போம்” என்று சொர்க்கத்துக்குப் போனாள். அங்கே யாரும் யாரோடும் பேசவில்லை. பூ பறிப்பதும், சாமி கும்பிடுவதுமாகவே இருந்தது. அவளுக்கு பயங்கரமான சலிப்பு. கடைசியில் எமதர்மன் கேட்டார்: “நீங்க எங்கே போக முடிவு பண்ணிருக்கிறீங்க? அவள், “நான் நரகத்துக்கே போகிறேன். சொர்க்கத்தை விட அது தான் நல்லா இருக்கு” என்றாள். எமதர்மன் எச்சரித்தார்: “நல்லா யோசிச்சுக்கோங்க. போன பிறகு திரும்பி வர முடியாது.” அவள் பிடிவாதமாக நரகத்தைத் தேர்வு செய்தாள். அவளை நரகத்தில் விட்டதும் கதவு மூடப்பட்டது. அப்போது முன்னிருந்த அழகான பூங்கா மாறி பாலைவனமாகி இருந்தது. நண்பர்கள் எல்லோரும் கஷ்டப்பட்டு வேலை செய்துகொண்டிருந்தார்கள். சாத்தானும் முகத்தில் மேக்-அப் இல்லாமல் கொடூரமாகத் தோன்றினார். அவள் அதிர்ச்சியடைந்து, “நேத்து இருந்தது போல இப்போ எல்லாம் மாறி இருக்கே! என்ன இது?” என்று கேட்டாள். அதற்கு சாத்தான் சிரித்துக் கொண்டு சொன்னார்: “நேத்து உங்களுக்கு நடந்தது இன்டர்வியூ. இன்று நீங்க ஒரு பணியாளர், போங்க போய் வேலையை பாருங்க என்றாராம் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக