இந்த கதை இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட கொஞ்சம் ஃபேண்டஸியான கதை : கருணையின் கனியும் – முனியனின் கதை ஒரு சிற்றூரில் பெரும் பண்ணையார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அனைத்தும் அவருக்கே சொந்தமானவை. ஊரிலுள்ள ஏழை உழவர்கள் அனைவரும் அவருக்குக் கூலியாகவே வேலை செய்தனர். அவரிடத்தில் முனியன் என்ற எளிய உழவன் வேலை பார்த்து வந்தான். முனியனுக்கு ஒரு சிறிய குடிசையும், சிறிதளவு நிலமும் மட்டுமே இருந்தன. அந்தச் சிறிய நிலத்தில் தானே உழைத்து, தானே விதைத்து வாழ வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் எப்போதும் இருந்தது. ஒருநாள் முனியன் பண்ணையாரிடம் சென்று பணிவுடன் கேட்டான்: “ஐயா… எல்லா நிலங்களிலும் விதை நட்டுவிட்டார்கள். என் நிலம் மட்டும் காலியாகவே இருக்கிறது. தயவுசெய்து கொஞ்சம் தானியம் கொடுங்கள். என் நிலத்திலும் விதைத்து வாழ முயற்சி செய்கிறேன்.” அதற்கு பண்ணையார் கோபமாக, “சொந்தமாக விவசாயம் செய்ய ஆசையா? அந்த எண்ணமே வேண்டாம். என்கீழ் கூலியாகவே இரு. அரை வயிற்றுக்காவது உணவு கிடைக்கும்!” என்று விரட்டியடித்தார்.
முனியன் மனம் உடைந்து வீடு திரும்பினான். நடந்ததை மனைவியிடம் சொல்லி, “நம் விதிதான் இப்படிப் போலிருக்கிறது… நாம் எப்போதும் பட்டினியில்தான் இருக்க வேண்டியதுதான்” என்று கண் கலங்கினான் அன்றைய நாள் முதல், அவர்களது குடிசையில் ஒரு சிறிய குருவி வந்து கூடு கட்டியது. அதைப் பார்த்த மனைவி, “நாம் காற்றுக்கும் மழைக்கும் அஞ்சிக் கொண்டிருக்கிறோம்… ஆனால் இந்தச் சிறு உயிர் இங்கே கூடு கட்டுகிறது பாருங்கள்” என்றாள். முனியன் இரக்கத்துடன், “பாவம்… அது வாயில்லாத உயிர். அதற்குத் தொல்லை செய்ய வேண்டாம்” என்றான். சில நாட்களில் அந்தக் குருவி நான்கு முட்டைகள் இட்டது. அவை நான்கு குஞ்சுகளாக வெளிவந்தன ஒருநாள் திடீரென அந்தக் கூட்டினுள் ஒரு பாம்பு நுழைந்தது. குஞ்சுகளை விழுங்கத் தொடங்கியது. அவற்றின் அலறலைக் கேட்ட முனியன் ஓடி வந்து பாம்பை அடித்துக் கொன்றான். ஆனால் அதற்குள் மூன்று குஞ்சுகள் உயிரிழந்தன. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் உயிரோடு துடித்துக் கொண்டிருந்தது. முனியன் இரக்கம் கொண்டு அதை எடுத்தான். அதன் உடைந்த காலுக்கு கட்டுப் போட்டு, மீண்டும் கூட்டில் வைத்தான். தினமும் தானும், மனைவியும் வேளா வேளைக்கு அந்தக் குஞ்சுக்கு உணவு கொடுத்து கவனித்தார்கள். சில நாட்களில் அந்தக் குஞ்சின் கால்கள் குணமடைந்தன. ஒரு நாள் அது பறந்து சென்றது. முனியனின் குடும்பம் இன்னும் வறுமையில் வாடிக் கொண்டிருந்தது.
ஒருநாள் மனைவி, “இப்படியே வாழ்க்கை போகுமா? நமக்கு ஒருநாளாவது விடிவு வருமா?” என்று கலங்கினாள். அந்தச் சமயம் கதவு தட்டும் ஓசை கேட்டது. முனியன் கதவைத் திறந்தான். அவன் காப்பாற்றிய குருவி தான் அது! அதன் வாயில் ஒரு சிறிய விதை இருந்தது. அதை முனியனின் கையில் வைத்து, “இந்த விதையை உன் தோட்டத்தில் நடு…” என்று சொல்லி பறந்து சென்றது. சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து, “இதை வீட்டின் முன்புறம் நடு…” என்று இன்னொரு விதையைத் தந்தது. மூன்றாம் முறையாக வந்து, “இதை சன்னலோரம் நடு… என் உயிரைக் காப்பாற்றிய உன் கருணைக்கு இதுவே நன்றி” என்று சொல்லி பறந்து சென்றது முனியன் மூன்று விதைகளையும் நட்டான். மறுநாள் காலையில் அங்கு மூன்று பெரிய பூசணிக் காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன! முதல் பூசணிக்காய் – அதை வெட்டியபோது, சுவை மிகுந்த பலவகை உணவுகள் நிறைந்திருந்தன. அதை வெட்டி உண்டுவிட்டு மீண்டும் சேர்த்தால் அது பழையபடி முழுப் பூசணிக்காயாக மாறியது. இரண்டாவது பூசணிக்காய் – அதற்குள் இருந்து அழகிய ஆடைகளும், விலை உயர்ந்த மணிகளும் வெளிவந்தன. மூன்றாவது பூசணிக்காய் – அதற்குள் இருந்து பொற்காசுகள் கொட்டின. அன்று முதல் முனியனும் அவன் குடும்பமும் வறுமையிலிருந்து விடுபட்டு, நிம்மதியான வாழ்வை அடைந்தார்கள். இதை அறிந்த பண்ணையார், பொறாமையால் அதேபோல் குருவியை ஏமாற்ற முயன்றார். ஆனால் அவர் கருணையால் அல்ல கபடத்தால் குருவியை வளர்த்தார். சாதாரண குருவியாகவே அந்த குருவி இருந்ததால் அவருக்கு எதுவுமே கிடைக்கவில்லை.
முதலாளித்துவமும் மனிதநேயமும் - இந்தக் கதையைப் படிக்கும் போது நாம் உணர வேண்டிய முக்கியமான பாடம் என்னவென்றால் முதலாளித்துவம் மனிதநேயமின்றி நடந்தால் அது எப்போதும் டாக்ஸிக்காக மாறும் பல இடங்களில் முதலாளிகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, வேலைக்காரர்களை எப்படியும் நடத்தலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அவர்கள் விரும்பினால் கூலியை குறைக்கலாம், விரும்பினால் வேலைக்காரர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கலாம். இது சமூகத்தில் சமத்துவத்தையும், மனிதத் தன்மையையும் அழிக்கும் ஒரு ஆபத்தான நிலை. நல்ல முதலாளி எப்படி இருக்க வேண்டும்? வேலைக்காரர்களும், முதலாளிகளும் ஒரே சமூகத்தின் அங்கமாக இருப்பதை உணர வேண்டும். வேலைக்காரர்களின் வாழ்க்கை, குடும்பம், எதிர்காலம் ஆகியவற்றை மதிக்க வேண்டும். வேலைக்காரர்களின் முன்னேற்றம் தடுக்கப்படாமல், அவர்களும் வளர வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். முதலாளிகள் மனிதநேயத்துடன் நடந்தால் வேலைக்காரர்களுக்கு நிம்மதி கிடைக்கும். சமூகத்தில் சமத்துவம் நிலைக்கும். அனைவரும் சேர்ந்து உழைத்தால், நாட்டின் வளர்ச்சி வேகமாகும். முதலாளித்துவம் என்பது தவறல்ல. ஆனால் அது கருணை, சமத்துவம், மனிதநேயம் ஆகியவற்றோடு இணைந்தால் மட்டுமே நல்ல சமூகத்தை உருவாக்க முடியும். வறுமை குறையும், அநீதி மறையும், ஒற்றுமை பெருகும். இதுவே ஒரு நல்ல சமூகத்தையும், நிலையான வளர்ச்சியையும் உருவாக்கும் அடிப்படையான காரணியாக இருக்கும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக