சமீபத்தில் இணையதளத்தில் ஒரு கருத்துப் பகிர்வை நான் பார்த்தேன். அந்த கருத்துப் பகிர்வு சாதாரணமாக இருந்ததல்ல; அது மாற்றத்தை உருவாக்கக்கூடிய சக்தி கொண்டதாக இருந்தது.
நேற்று மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி பேருந்தில் பயணம் செய்தபோது, ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தைத் தொடர்ந்து அப்துல் கலாம் நிறுத்தம் என்ற இடத்தில் வழக்கறிஞர் படிப்பில் பயிலும் ஒரு மாணவி
இரவு 10.30 மணிக்கு பேருந்தில் இருந்து தனியாக இறங்கத் தயாரானார். ஆனால் உடனே நடத்துனர், “உன் பெற்றோர்கள் யாராவது வந்து அழைத்துச் சென்றால்தான் இந்த இரவில் இறக்கி விடுவேன்; இல்லையெனில் இறக்கி விடமாட்டேன்” என்று உறுதியுடன் கூறினார்.
உடனே அவர் மாணவியின் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தார். அவர்கள் வருவதற்கு சுமார் 15 நிமிடங்கள் தாமதமானதால், ஓட்டுனரும் நடத்துனரும் “இப்போது உங்களை இறக்கிவிட முடியாது, தயவுசெய்து பேருந்தில் இருங்கள்; ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பாக இறக்குகிறோம்” என்று அறிவித்தனர்.
பெண் குழந்தையை பாதுகாப்பாக கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அவர்கள் பத்து நிமிடங்கள் காத்திருந்தனர். பின்னர் மாணவியின் சித்தப்பா வந்து அழைத்துச் செல்லும் வரை பேருந்து அந்த இடத்தில் நின்றது. உண்மையிலேயே இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்திய ஓட்டுநர் அந்தோணி ராஜ் மற்றும் நடத்துனர் முத்துராமலிங்கம் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரியவை !
இது போன்ற நிகழ்வுகள், சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகின்றன. பெண்களுடைய பாதுகாப்புக்காக இன்னும் பல முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். தனிநபராக நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், உண்மையில் சிஸ்டம் கடினமாகவும் உறுதியானதாகவும் அமைக்கப்பட்டால்தான் பெண்கள் பாதுகாப்பாக வேலைக்கு செல்லவும், பணிக்கு செல்லவும், படிப்புக்கு செல்லவும், வெளியில் சுதந்திரமாகச் செல்லவும் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். அப்படியான சூழல் உருவானால் மட்டுமே அனைத்தும் சரியான பாதையில் இருக்கும்.
இதனால் சமூகத்தில் பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அதுவே நம் நாட்டின் உண்மையான வளர்ச்சியாகும். பெண்களுடைய பாதுகாப்பு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்காமல், குறை கூறுவதில் மட்டும் இணையதளம் அல்லது சமூகமே சிக்கிக் கொள்ளக் கூடாது. பாதுகாப்பை உறுதி செய்யும் நடைமுறைகள், சட்டங்கள், வசதிகள் அனைத்தும் வலுவாக அமல்படுத்தப்பட்டால்தான் பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழவும், நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுக்கவும் முடியும்.
இணையத்தில் பகிரப்படும் சில கருத்துகள் வெறும் வார்த்தைகளாக இல்லாமல், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருக்கும். அந்த சம்பவமும் அப்படித்தான் அது மனிதர்களின் சிந்தனையை மாற்றி, புதிய பார்வையை உருவாக்கும் வல்லமை கொண்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக