சீனாவில் ஒரு பெரியவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். முதல் இரண்டு மகன்களுக்கும் திருமணம் செய்து வைத்திருந்தார். வீடு எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்தது. ஆனால், அந்த இரு மருமகள்கள் தங்கள் தாய்வீட்டுக்குச் சென்றால், விரைவில் திரும்பி வராமல், பல நாட்கள் அங்கேயே தங்கி விடுவார்கள்.
ஒருநாள் அவர்கள் தாய்வீடு செல்ல அனுமதி கேட்டனர். பெரியவர் சிரித்தபடி, “போய் வாருங்கள். ஆனால், திரும்பி வரும் போது எனக்கு இரண்டு பொருட்களை கொண்டு வர வேண்டும். கொண்டு வராவிட்டால், இனி உங்கள் அம்மா வீடு செல்ல அனுமதிக்க மாட்டேன்” என்றார்.
“சரி மாமா, என்ன வேண்டும், சொல்லுங்கள்” என்றனர் மருமகள்கள்.
பெரியவர், “ஒரு காகிதத்தில் கொஞ்சம் காற்றை அடைத்து கொண்டு வர வேண்டும்” என்று ஒருவரிடம் கூறினார். மற்றொருவரிடம், “ஒரு காகிதத்தில் கொஞ்சம் தீயை கட்டி கொண்டு வர வேண்டும்” என்றார்.
இதைக் கேட்ட மருமகள்கள் இருவரும் திகைத்தனர். “இப்படி எப்படி சாத்தியம்?” என்று கவலையுடன் கிளம்பினர். தாய் வீட்டில் சில நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால், திரும்ப வேண்டிய நாள் வந்ததும், மாமனார் கேட்ட விஷயம் நினைவுக்கு வந்து பயந்தனர்.
வழியெங்கும் கவலையோடு நடந்துகொண்டிருந்தனர். அப்போது எருமை மீது சவாரி செய்துகொண்டு வந்த ஒரு இளம்பெண், “உங்களுக்கு என்ன பிரச்சினை?” என்று கேட்டார். அவர்கள் தங்கள் மாமனார் கேட்டதைச் சொன்னார்கள். அந்தப் பெண் சிரித்தபடி, “இவ்வளவுதானா, கவலைப்படாதீர்கள்” என்றார்.
முதல் மருமகளிடம், “ஒரு காகிதத்தில் விசிறி செய்து கொடு. அதுவே காற்றை அடைத்தது” என்றார். இரண்டாவது மருமகளிடம், “ஒரு சிம்னி விளக்கை ஏற்றி, அதை ஒரு காகிதத்தில் சுற்றி எடுத்துச் செல். அதுவே தீயை கட்டியது” என்றார்.
மருமகள்கள் மகிழ்ச்சியுடன் அந்தப் பெண்ணுக்கு நன்றி கூறி, வீட்டிற்கு திரும்பினர். மாமனாரிடம் விசிறியும், சிம்னி விளக்கையும் தந்தனர். பெரியவர் ஆச்சரியப்பட்டார். அவர்கள் வழியில் சந்தித்த அந்தப் பெண் பற்றிச் சொன்னார்கள்.
பெரியவர், “இவ்வளவு புத்திசாலியான பெண்ணை என் கடைசி மகனுக்கு மணம் முடிக்கப் போகிறேன்” என்றார். ஆட்களை அனுப்பி அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்தார். சம்பந்தம் பேசப்பட்டு, திருமணம் இனிதே நடந்தது. அந்தப் பெண் வீட்டில் அனைத்தையும் பொறுப்பாகச் செய்து, அனைவரின் அன்பையும் பெற்றார்.
பெரியவர் மகிழ்ச்சியுடன், “இது நிறைவான வீடு” என்று தனது வாசலில் ஒரு பலகையை மாட்டி வைத்தார்.
சில காலம் கழித்து அந்த வழியே சென்ற ஒரு துறவி அந்தப் பலகையைப் பார்த்தார். “யார் இது, இவ்வளவு திமிராக எழுதி வைத்தது? இந்த வீட்டினருக்குப் பாடம் புகட்டி, திமிரை அடக்க வேண்டும்” என்று முடிவு செய்தார்.
வீட்டில் நுழைந்த அவரை, மூன்றாவது மருமகள்தான் வரவேற்றார். துறவி, “இது நிறைவான வீடாம். அப்படியானால், இந்தச் சாலையின் நீளத்துக்கு ஒரு துணியை நெய்து கொடு. இல்லாவிட்டால் சபித்து விடுவேன்” என்றார்.
மருமகள் பணிவுடன், “கண்டிப்பாக நெய்கிறேன். ஆனால், சாலையின் இரு முனைகளையும் கண்டுபிடித்து, எவ்வளவு நீளம் என்று அளந்து தாங்கள் சொன்னால், அந்த அளவுக்கு நான் துணியை நெய்து கொடுக்கிறேன்” என்றார்.
அந்தச் சாலை தலைநகரத்திலிருந்து நாட்டின் எல்லைவரை சென்றது. அதன் ஆரம்பமும் முடிவும் யாருக்கும் தெரியாததால், துறவிக்குப் பதில் சொல்ல முடியவில்லை.
துறவி, “சரி, வேண்டாம். கிணற்றில் உள்ள நீர் அளவுக்கு எண்ணெய் ஆட்டிக் கொடு” என்றார்.
மருமகள், “தாங்கள் தயவு செய்து கிணற்றில் எத்தனை ஆழத்துக்கு நீர் உள்ளது என்று சொன்னால், உடனே அத்தனை ஆழத்துக்கு எண்ணெயை ஆட்டித் தருகிறேன்” என்றார்.
துறவி குழம்பினார். “இந்தப் பெண்ணை மடக்குவது எளிதல்ல” என்று உணர்ந்தார். யோசித்தபடியே, பறந்து வந்த ஒரு புறாவைச் சட்டென்று பிடித்தார்.
“நீ மிகவும் புத்திசாலி. இந்தப் புறாவை நான் பறக்க விடப் போகிறேனா, இல்லை கூண்டுக்குள் அடைக்கப் போகிறேனா என்று சொல் பார்ப்போம்” என்றார்.
மருமகள் வணங்கி, “தாங்கள் அனைத்தையும் அறிந்த ஞானி. வாசலில் நிற்கும் நான் இப்போது உள்ளே செல்லப் போகிறேனா, இல்லை தெருவில் இறங்கப் போகிறேனா என்று சொல்லுங்கள். நானும் உங்கள் கேள்விக்கு விடை தருகிறேன்” என்றார்.
துறவி அமைதியாக இருந்தார். மருமகள், “துறவியான தங்களுக்கே என் கேள்விக்கு விடை தெரியாதபோது, அனைத்தும் அறிந்த ஞானியான தங்களது கேள்விக்கு எனக்கு எப்படி விடை தெரியும்?” என்று பணிவுடன் கூறினார்.
துறவி சிரித்தபடி, “நீ சொல்வதும் சரிதான். இந்த வீடு உண்மையிலேயே நிறைவான வீடுதான்” என்று கூறி தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
அறிவும் புத்திசாலித்தனமும் இருந்தால் எந்த சிக்கலையும் சமாளிக்கலாம். பணிவும் நகைச்சுவையும் சேர்ந்து இருந்தால், பெரிய பிரச்சினைகளையும் எளிதில் தீர்க்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக