புதன், 3 டிசம்பர், 2025

GENERAL TALKS - வாழ்க்கையை புரிய வைத்த கெட்ட கனவு !

 



இணையதளத்தில் இருந்து எடுத்த கதை : அவர் ஒரு மிகப்பெரிய பிசினஸ்மேன். சின்னதாக ஒரு மளிகைக்கடையில் தொடங்கிய தொழில், ஜுவல்லரி ஷாப், ஹோட்டல், துணிக்கடை, டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் என விரிந்து, நகரத்தில் பெரும் செல்வந்தர், கௌரவத்துக்குரியவர் என்ற பெயரையும் பெற்றிருந்தார். அன்பான மனைவி, இரு ஆண் மகன்கள் இருந்தும், அவருக்கு நேரமில்லை. யாரையும் நம்பி பிசினஸை ஒப்படைக்க மனமில்லை. விடியற்காலையில் தொடங்கும் நாள், நள்ளிரவில்தான் முடிகிறது. மனைவி, பிள்ளைகளுடன் உரையாடவோ, சேர்ந்து சாப்பிடவோ நேரமில்லாமல், “பிசினஸ், பிசினஸ்” என்று அலைந்துகொண்டிருந்தார். ஒருநாள் இரவு அவர் வீடு திரும்பியபோது மணி பன்னிரண்டைத் தாண்டியிருந்தது. வழக்கமாக கதவைத் திறந்து வரவேற்கும் மனைவி அன்றைக்கு இல்லை. வீட்டுப் பணியாளர்தான் கதவைத் திறந்து, “அம்மாவுக்கு திடீரென மயக்கம் வந்தது. ஹாஸ்பிட்டலில் ட்ரீட்மென்ட் எடுத்துவிட்டு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் வந்தார். ரூமில் தூங்குகிறார்” என்றான். “ஏன், என்ன ஆச்சு?” என்று கேட்டபோது, “பிரஷர், ஆனால் பயப்படத் தேவையில்லை. மருந்து மாத்திரை சாப்பிட்டு ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும்” என்றான். “எனக்கு போன் பண்ணிச் சொல்ல வேண்டியதுதானே?” என்றார். “நிறைய தடவை உங்க பெரிய பையன் போன் பண்ணினாராம். ‘ஸ்விட்ச்டு ஆஃப்’னு வந்துச்சாம்” என்றான். அப்போதுதான் அவர் ஒரு மீட்டிங்குக்காக இரவு எட்டு மணிக்கு தன் மொபைலை ஆஃப் செய்தது நினைவுக்கு வந்தது. அவசரமாக மனைவி படுத்திருந்த அறைக்குள் நுழைந்தார். அவள் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். அவர் தலையை ஆதுரமாக வருடி, “சே… இவளை கவனிக்காமல் விட்டுவிட்டோமே!” என்கிற வருத்தம் எழுந்தது. திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. குடும்பத்தோடு மகிழ்ந்திருந்த நாட்களை நினைவுகூர முயன்றார். நினைவுக்கு வந்தது மிகச் சொற்ப தினங்களே. மனைவியின் பக்கத்தில் இப்படி நெருக்கமாக அமர்ந்தே வெகு நாள்கள் ஆகிவிட்டது என்பதை நினைத்ததும் அவருக்கு திடுக்கென்று இருந்தது. அறையை விட்டு வெளியே வந்து, மகன்கள் படுத்திருந்த அறைக்குள் பார்த்தார். சத்தமில்லாமல் கதவை மூடி, தனி அறைக்குச் சென்றார். பணியாளர் “ஐயா, சாப்பிட ஏதாவது வேணுமா?” என்று கேட்டபோது, “வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினார். உடையை மாற்றிக்கொண்டு கட்டிலில் அமர்ந்தார். “இவ்வளவு சம்பாதித்து என்ன பயன்? நாம் யாருக்காக வாழ வேண்டும்? பிள்ளைகள், மனைவி இவர்களோடு நேரம் செலவழிக்க முடியாமல் அப்படி என்ன பிசினஸ்? ஒருநாள் நிம்மதியாக இருந்தோமா? குடும்பத்துடன் கோயில், சுற்றுலா, உறவினர் வீடு, நண்பர்கள் வீடு, விழா எங்காவது போனோமா? எத்தனை சந்தோஷங்களை இழந்திருக்கிறேன்!” என்று யோசித்தார். கடைசியில் அவர் முடிவு செய்தார்: “இன்றுதான் கடைசி. இன்றோடு பிசினஸிலிருந்து ஓய்வு பெற வேண்டும். இனிமேல் வாழ வேண்டும். எனக்காக, என் மனைவிக்காக, என் குடும்பத்துக்காக…” அப்போதுதான் கட்டிலுக்கு அருகிலிருந்த நாற்காலியில் யாரோ உட்கார்ந்திருப்பது தெரிந்தது. “கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டேனே! இது யார்?” என்று கேட்டார். அந்த உருவம், “நான் மரண தேவதை. உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்” என்றது. அவர் திடுக்கிட்டார். “ஐயா சாமி, நான் இப்போதுதான் வாழ வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். இப்போ என்னை கூட்டிச் செல்ல வந்திருக்கீங்களே! கொஞ்சம் அவகாசம் கொடுங்க!” என்று மன்றாடினார். செல்வத்தையெல்லாம் கொடுப்பதாகச் சொல்லியும், மரண தேவதை செவிசாய்க்கவில்லை. “ஒரே ஒரு மணி நேரம் மட்டும் அவகாசம் கொடுங்க. என் மனைவி, குழந்தைகளுக்கான கடமைகள் இருக்கின்றன. நண்பர்கள், உறவினர்களை பார்க்க வேண்டும்” என்றார். அதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை. “சரி, ஒரே ஒரு நிமிஷமாவது கொடுப்பீங்களா? உலகத்துக்கு நான் ஒரு குறிப்பு எழுத வேண்டும்” என்று கேட்டார். மரண தேவதை ஒப்புக்கொண்டது. அவர் எழுதினார்: “உங்களுக்கான நேரத்தை சரியான வழியில் செலவழியுங்கள். என்னுடைய அத்தனை சொத்துகளை ஈடாகக் கொடுத்தாலும்கூட எனக்காக ஒரு மணி நேரத்தை வாங்க முடியவில்லை. இது ஒரு பாடம். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணடிக்காமல் அனுபவித்து வாழுங்கள்!” அப்போது கதவை பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. அவர் திடுக்கிட்டு கண்விழித்தார். விடிந்துவிட்டது. கதவைத் திறந்தபோது பணியாளர், “ஐயா, ரொம்ப நேரமா தட்டுறேன். நீங்க திறக்கலையா? பயந்துட்டேன். அதான் பலமாகத் தட்டிட்டேன்” என்றான். அவர் அவசரமாக மேஜையைப் பார்த்தார். அங்கே குறிப்பு இல்லை. பேனாவும், எழுதப்படாத வெள்ளைத் தாளும் இருந்தன. வாழ்க்கையில் எதை இழக்கக் கூடாது என்பதை உணர்த்தும் யதார்த்தக் கதை. நேற்று என்பது போய்விட்டது; நாளை இன்னும் வரவில்லை; நமக்கிருப்பது இன்று மட்டுமே. அதை வாழ்ந்து பார்ப்போம். வாழ்வின் யதார்த்தத்தை அழகாகச் சொல்கிறார்கள். ஒரு மனிதனின் பிறந்தநாள், அவன் ஒரு வருடம் மூப்படைந்துவிட்டான் என்பதை உணர்த்தும் நாள். காலம் யாருக்காகவும் காத்திருக்காது.

கருத்துகள் இல்லை:

TAMIL TALKS - தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை :)

இணையதளத்தில் மன்னிப்பது என்பது தவறான விஷயம் என்று ஒரு கருத்து பகிர்வு இப்படி ஒரு மனிதர் பகிர்ந்துகொண்டார் ! மனிதர்கள் வாழ்க்கையில் பலவிதமாக ...