1984-ஆம் ஆண்டு இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த வைதேகி காத்திருந்தாள் திரைப்படம், தமிழ் சினிமாவின் மறக்க முடியாத படைப்புகளில் ஒன்றாகும். விஜயகாந்த், ரேவதி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம், கிராமிய சூழலை மையமாகக் கொண்டு எளிமையான கதைக்களத்துடன் உருவானது. உணர்வுபூர்வமான நடிப்பும், இளையராஜாவின் மனதை கவரும் இசையும் இணைந்து, இந்த படத்தை ஒரு காவியமாக உயர்த்தின. இந்த படத்தின் சிறப்பம்சம், அதன் பாடல்கள் உருவான விதமே. பொதுவாக, திரைக்கதை எழுதப்பட்ட பின் பாடல்களுக்கு மெட்டுகள் அமைக்கப்படும். ஆனால் வைதேகி காத்திருந்தாள் படத்தில் அது தலைகீழாக நடந்தது. இளையராஜா முதலில் ஆறு பாடல்களுக்கு இசை அமைத்து, அவற்றை ஒரே படத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை வைத்தார். தயாரிப்பாளர் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டதால், அந்த ஆறு பாடல்களை மையமாகக் கொண்டு திரைக்கதை எழுதப்பட்டது. இதனால், பாடல்களே கதைக்கான அடித்தளமாக அமைந்தன. இந்த தனித்துவமான சம்பவத்தை இளையராஜா பல நேர்காணல்களில் பகிர்ந்துள்ளார். பாடல்களைப் போலவே, கவுண்டமணி–செந்தில் இணையின் நகைச்சுவையும் இன்றளவும் பேசப்படுகிறது. குறிப்பாக “பெட்டர்மேக்ஸ் லைட்” காமெடி, காலத்தைக் கடந்து இன்னும் சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் பிரபலமானது. பல்வேறு நிகழ்ச்சிகளில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட இந்த காமெடி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் செந்தில், அந்த காமெடி ஒரே டேக்கில் படமாக்கப்பட்டதாகவும், கவுண்டமணியை நோக்கி பேசியதால் தான் அது ஹிட்டானதாகவும் கூறியுள்ளார். இல்லையெனில், அந்த காமெடி இவ்வளவு பிரபலமாகி இருக்காது என அவர் சிரிப்புடன் நினைவுகூர்ந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக