திங்கள், 1 டிசம்பர், 2025

GENERAL TALKS - இது ஒரு பிரபலமான சீன நாட்டுப்புற கதை !

 





சீனாவில் ஒரு பெரியவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். முதல் இரண்டு மகன்களுக்கும் திருமணம் செய்து வைத்திருந்தார். வீடு எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்தது. ஆனால், அந்த இரு மருமகள்கள் தங்கள் தாய்வீட்டுக்குச் சென்றால், விரைவில் திரும்பி வராமல், பல நாட்கள் அங்கேயே தங்கி விடுவார்கள்.  

ஒருநாள் அவர்கள் தாய்வீடு செல்ல அனுமதி கேட்டனர். பெரியவர் சிரித்தபடி, “போய் வாருங்கள். ஆனால், திரும்பி வரும் போது எனக்கு இரண்டு பொருட்களை கொண்டு வர வேண்டும். கொண்டு வராவிட்டால், இனி உங்கள் அம்மா வீடு செல்ல அனுமதிக்க மாட்டேன்” என்றார்.  

“சரி மாமா, என்ன வேண்டும், சொல்லுங்கள்” என்றனர் மருமகள்கள்.  

பெரியவர், “ஒரு காகிதத்தில் கொஞ்சம் காற்றை அடைத்து கொண்டு வர வேண்டும்” என்று ஒருவரிடம் கூறினார். மற்றொருவரிடம், “ஒரு காகிதத்தில் கொஞ்சம் தீயை கட்டி கொண்டு வர வேண்டும்” என்றார்.  

இதைக் கேட்ட மருமகள்கள் இருவரும் திகைத்தனர். “இப்படி எப்படி சாத்தியம்?” என்று கவலையுடன் கிளம்பினர். தாய் வீட்டில் சில நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால், திரும்ப வேண்டிய நாள் வந்ததும், மாமனார் கேட்ட விஷயம் நினைவுக்கு வந்து பயந்தனர்.  

வழியெங்கும் கவலையோடு நடந்துகொண்டிருந்தனர். அப்போது எருமை மீது சவாரி செய்துகொண்டு வந்த ஒரு இளம்பெண், “உங்களுக்கு என்ன பிரச்சினை?” என்று கேட்டார். அவர்கள் தங்கள் மாமனார் கேட்டதைச் சொன்னார்கள். அந்தப் பெண் சிரித்தபடி, “இவ்வளவுதானா, கவலைப்படாதீர்கள்” என்றார்.  

முதல் மருமகளிடம், “ஒரு காகிதத்தில் விசிறி செய்து கொடு. அதுவே காற்றை அடைத்தது” என்றார். இரண்டாவது மருமகளிடம், “ஒரு சிம்னி விளக்கை ஏற்றி, அதை ஒரு காகிதத்தில் சுற்றி எடுத்துச் செல். அதுவே தீயை கட்டியது” என்றார்.  

மருமகள்கள் மகிழ்ச்சியுடன் அந்தப் பெண்ணுக்கு நன்றி கூறி, வீட்டிற்கு திரும்பினர். மாமனாரிடம் விசிறியும், சிம்னி விளக்கையும் தந்தனர். பெரியவர் ஆச்சரியப்பட்டார். அவர்கள் வழியில் சந்தித்த அந்தப் பெண் பற்றிச் சொன்னார்கள்.  

பெரியவர், “இவ்வளவு புத்திசாலியான பெண்ணை என் கடைசி மகனுக்கு மணம் முடிக்கப் போகிறேன்” என்றார். ஆட்களை அனுப்பி அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்தார். சம்பந்தம் பேசப்பட்டு, திருமணம் இனிதே நடந்தது. அந்தப் பெண் வீட்டில் அனைத்தையும் பொறுப்பாகச் செய்து, அனைவரின் அன்பையும் பெற்றார்.  

பெரியவர் மகிழ்ச்சியுடன், “இது நிறைவான வீடு” என்று தனது வாசலில் ஒரு பலகையை மாட்டி வைத்தார்.  

சில காலம் கழித்து அந்த வழியே சென்ற ஒரு துறவி அந்தப் பலகையைப் பார்த்தார். “யார் இது, இவ்வளவு திமிராக எழுதி வைத்தது? இந்த வீட்டினருக்குப் பாடம் புகட்டி, திமிரை அடக்க வேண்டும்” என்று முடிவு செய்தார்.  

வீட்டில் நுழைந்த அவரை, மூன்றாவது மருமகள்தான் வரவேற்றார். துறவி, “இது நிறைவான வீடாம். அப்படியானால், இந்தச் சாலையின் நீளத்துக்கு ஒரு துணியை நெய்து கொடு. இல்லாவிட்டால் சபித்து விடுவேன்” என்றார்.  

மருமகள் பணிவுடன், “கண்டிப்பாக நெய்கிறேன். ஆனால், சாலையின் இரு முனைகளையும் கண்டுபிடித்து, எவ்வளவு நீளம் என்று அளந்து தாங்கள் சொன்னால், அந்த அளவுக்கு நான் துணியை நெய்து கொடுக்கிறேன்” என்றார்.  

அந்தச் சாலை தலைநகரத்திலிருந்து நாட்டின் எல்லைவரை சென்றது. அதன் ஆரம்பமும் முடிவும் யாருக்கும் தெரியாததால், துறவிக்குப் பதில் சொல்ல முடியவில்லை.  

துறவி, “சரி, வேண்டாம். கிணற்றில் உள்ள நீர் அளவுக்கு எண்ணெய் ஆட்டிக் கொடு” என்றார்.  

மருமகள், “தாங்கள் தயவு செய்து கிணற்றில் எத்தனை ஆழத்துக்கு நீர் உள்ளது என்று சொன்னால், உடனே அத்தனை ஆழத்துக்கு எண்ணெயை ஆட்டித் தருகிறேன்” என்றார்.  

துறவி குழம்பினார். “இந்தப் பெண்ணை மடக்குவது எளிதல்ல” என்று உணர்ந்தார். யோசித்தபடியே, பறந்து வந்த ஒரு புறாவைச் சட்டென்று பிடித்தார்.  

“நீ மிகவும் புத்திசாலி. இந்தப் புறாவை நான் பறக்க விடப் போகிறேனா, இல்லை கூண்டுக்குள் அடைக்கப் போகிறேனா என்று சொல் பார்ப்போம்” என்றார்.  

மருமகள் வணங்கி, “தாங்கள் அனைத்தையும் அறிந்த ஞானி. வாசலில் நிற்கும் நான் இப்போது உள்ளே செல்லப் போகிறேனா, இல்லை தெருவில் இறங்கப் போகிறேனா என்று சொல்லுங்கள். நானும் உங்கள் கேள்விக்கு விடை தருகிறேன்” என்றார்.  

துறவி அமைதியாக இருந்தார். மருமகள், “துறவியான தங்களுக்கே என் கேள்விக்கு விடை தெரியாதபோது, அனைத்தும் அறிந்த ஞானியான தங்களது கேள்விக்கு எனக்கு எப்படி விடை தெரியும்?” என்று பணிவுடன் கூறினார்.  

துறவி சிரித்தபடி, “நீ சொல்வதும் சரிதான். இந்த வீடு உண்மையிலேயே நிறைவான வீடுதான்” என்று கூறி தனது பயணத்தைத் தொடர்ந்தார்.  

அறிவும் புத்திசாலித்தனமும் இருந்தால் எந்த சிக்கலையும் சமாளிக்கலாம். பணிவும் நகைச்சுவையும் சேர்ந்து இருந்தால், பெரிய பிரச்சினைகளையும் எளிதில் தீர்க்க முடியும்.  


GENERAL TALKS - விலைமதிப்பு என்பது முக்கியமானது !


ஒருநாள் விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர், “என் அரண்மனையில் யாராவது உண்மையான அறிவும் சாமர்த்தியமும் காட்டினால், அவருக்கு நான் ஒரு பெரிய பரிசு தருவேன்” என்று அறிவித்தார்.   பலரும் வந்து தங்கள் திறமைகளை காட்டினர். ஆனால், அரசர் திருப்தி அடையவில்லை.  அப்போது தெனாலி ராமன் வந்தார். அவர் சிரித்தபடி, “மகாராஜா, நான் உங்களுக்கு ஒரு சின்ன கேள்வி கேட்கிறேன். அதற்கு நீங்கள் பதில் சொல்ல முடியுமா?” என்றார்.  அரசர் ஆர்வமாக கேட்டார்.  தெனாலி ராமன் சொன்னார்: “மகாராஜா, உலகத்தில் எது மிக விலைமதிப்பானது?”  அரசர் சற்று யோசித்து, “பொன்னும் வைரமும் தான்” என்றார்.   அப்போது ராமன் சிரித்தபடி, “இல்லை மகாராஜா, உலகத்தில் மிக விலைமதிப்பானது நேரம் தான். அதை யாராலும் வாங்க முடியாது, விற்க முடியாது. அது போய்விட்டால் திரும்ப கிடைக்காது. அதனால் தான் நேரத்தை மதிக்க வேண்டும்” என்றார். அரசர் மகிழ்ந்து, “நீ எப்போதும் சாமர்த்தியமாகவும் அறிவுடன் பேசுகிறாய். அதனால் தான் உன்னை நான் விரும்புகிறேன்” என்று கூறி, ராமனுக்கு பரிசு வழங்கினார்.  இந்தக் கதை நமக்கு சொல்லும் பாடம்: நேரம் என்பது உலகில் மிக விலைமதிப்பானது. அதை மதித்து பயன்படுத்தினால் வாழ்க்கை சிறக்கும் - விலைமத்திப்புள்ள பொருட்கள் பற்றியும் இன்னொரு கதை இருக்கிறது : ஒருநாள் விஜயநகரத்தில் ஒரு வியாபாரி வந்தார். அவர் அரசரிடம், “மகாராஜா, நான் விற்கும் பொருட்கள் உலகிலேயே சிறந்தவை. யாராலும் இதை விட நல்லதை காண முடியாது” என்று பெருமையாகச் சொன்னார். அரசர் சிரித்தபடி, “அப்படியா? அப்படியென்றால், உன் பொருட்களை சோதிக்க வேண்டும்” என்றார். வியாபாரி பல விலைமதிப்பான பொருட்களை கொண்டு வந்தார். அனைவரும் பார்த்து ஆச்சரியப்பட்டனர். அப்போது தெனாலி ராமன் வந்தார். அவர் சிரித்தபடி, “மகாராஜா, இந்த வியாபாரி சொல்வது உண்மையா என்று நான் சோதிக்கிறேன்” என்றார். அவர் வியாபாரியிடம், “உன் பொருட்கள் உலகிலேயே சிறந்தவை என்றால், அதை வாங்கியவுடன் யாரும் அதை விற்க மாட்டார்கள். ஆனால், நீ விற்கிறாய். அதனால், உன் பொருட்கள் சிறந்தவை அல்ல” என்று கூறினார். அரசர் சிரித்தார். வியாபாரி சங்கடப்பட்டார். உண்மையான சிறப்பு கொண்ட பொருள் அல்லது விஷயம் விற்கப்படாது; அது மதிப்புடன் பாதுகாக்கப்படும் என்பதே இந்த கதையின் கருத்து ! 

GENERAL TALKS - நேரத்தை நலனுக்கு செலவழிக்க வேண்டும் !

 ஒரு நாள் விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர், “இன்று காலை நான் ஒரு வித்தியாசமான கனவு கண்டேன். அந்தக் கனவின் உண்மையான பொருள் என்ன என்பதை யாராவது விளக்க வேண்டும்” என்று அரண்மனையில் அறிவித்தார். பலரும் வந்து பலவிதமான விளக்கங்களை அளித்தனர். ஆனால், அரசர் எந்த விளக்கத்திலும் திருப்தி அடையவில்லை. அப்போது தெனாலி ராமன் வந்தார். அவர் சிரித்தபடி, “மகாராஜா, கனவுகளுக்கு எப்போதும் ஆழமான அர்த்தம் தேட வேண்டியதில்லை. அது நம் மனதில் தோன்றும் சிந்தனைகளின் பிரதிபலிப்பு மட்டுமே. ஆனால், நீங்கள் விரும்பினால் நான் ஒரு நல்ல அர்த்தம் சொல்லுகிறேன்” என்றார் அரசர் ஆர்வமாக கேட்டார். தெனாலி ராமன் சொன்னார்: “மகாராஜா, உங்கள் கனவு நல்லது. அது உங்கள் மனதில் எப்போதும் மக்களின் நலனுக்காக சிந்திக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. அதுவே ஒரு அரசரின் உண்மையான கடமை.” அரசர் மகிழ்ந்து, “நீ எப்போதும் சாமர்த்தியமாகவும் நகைச்சுவையாகவும் பதில் சொல்கிறாய். அதனால் தான் உன்னை நான் விரும்புகிறேன்” என்று பாராட்டினார். நம்முடைய வாழ்க்கையை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நம்முடைய நலனுக்கும் மற்றவர்களின் நலனுக்கும் மட்டுமே நமது நேரத்தை செலவு செய்ய வேண்டும். அதற்கு அப்பாற்பட்ட தேவையில்லாத கற்பனைகளின் அடிப்படையில் நேரத்தை வீணடித்தால், நாம் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியும் பயனற்றதாகவே மாறிவிடும். நேரம் என்பது மிக மதிப்புமிக்க சொத்து. அதை சரியான நோக்கத்திற்காக பயன்படுத்தினால், அது நமக்கும் சமூகத்திற்கும் நல்ல பலன்களைத் தரும். ஆனால், தேவையற்ற சிந்தனைகளில் நேரத்தை வீணடித்தால், அந்த நேரம் நமக்கு நஷ்டமாகவே முடியும். இந்தக் கருத்து வலியுறுத்துவது: நேரத்தை நம் நலனுக்கும், பிறரின் நலனுக்கும் மட்டுமே செலவிட வேண்டும்; அதுவே வாழ்க்கையின் உண்மையான பயன்

GENERAL TALKS - வேலை செய்யும் ஆர்வம் குறைந்து விடும்.

ஒரு நாள் விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் இருந்தபோது, அரண்மனைக்குள் எலிகள் அதிகமாகி விட்டன. அதைத் தடுக்க, அரண்மனைக்குள் ஒரு பூனை வைத்தனர். முதலில் இந்த பூனை எலிகளை துரத்த செய்தது. 

ஒரு சில நாட்களில் அந்த பூனை எலிகளை பிடித்து சாப்பிடாமல், சோம்பேறியாக அங்கேயே தூங்கிக் கொண்டிருந்தது. இதனால் எலிகள் இன்னும் அதிகமாகி விட்டன.

அரசர் கோபமாக, “இந்த பூனைக்கு தினமும் பால் கொடுத்து சம்பளம் கொடுக்கிறோம். ஆனாலும் வேலை செய்யவில்லை!” என்று கூறினார்.

அப்போது தெனாலி ராமன் சிரித்தபடி, “மகாராஜா, பூனைக்கு சம்பளம் கொடுக்க வேண்டாம். பசியோடு இருந்தால் தான் எலிகளை பிடித்து சாப்பிடும். பால் கொடுத்தால் சோம்பேறியாகி விடும்” என்றார்.

அரசர் உடனே பூனைக்கு பால் கொடுப்பதை நிறுத்தினார். சில நாட்களில் பூனை பசியோடு எலிகளை பிடித்து சாப்பிட ஆரம்பித்தது.

பணத்தை செலவு செய்வதிலும் சில கட்டுப்பாடுகள் அவசியம் இருக்க வேண்டும். அந்த கட்டுப்பாடுகள் இருந்தால்தான் செலவினத்தில் ஒரு நிதானமும், தெளிவும் இருக்கும். 

இல்லையெனில், நாம் பணத்தை ஒரு காரியத்துக்காக செலவிட்டாலும், அந்த காரியம் நம் எண்ணிய வேகத்தில் நடைபெறாது. அது மெதுவாக மட்டுமே முன்னேறும்.  

அந்த மெதுவான முன்னேற்றம், காலத்தைப் பொறுத்து பார்த்தால் நமக்கு நஷ்டமாகவே முடியும். எனவே, பணத்தை செலவிடும் போது திட்டமிட்ட கட்டுப்பாடுகளுடன் செயல்படுவது மிக முக்கியம். பணம் என்பது வெறும் கருவி

அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதே நம் வாழ்க்கையின் முன்னேற்றத்தையும், நஷ்டத்தையும் தீர்மானிக்கிறது.

GENERAL TALKS - யோசித்து செய்யவேண்டிய விஷயம் !

 


விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் ஒருமுறை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போது அரண்மனையில் இருந்த வைத்தியர், “மகாராஜா, உங்களுக்கு சிறப்பு மருந்து தேவை. அதற்காக அதிக செலவு வரும்” என்று கூறினார். அரசர் உடனே, “எவ்வளவு செலவு வேண்டுமானாலும் நான் தருகிறேன். என் உடல்நலம் சரியாக வேண்டும்” என்றார். அப்போது தெனாலி ராமன் அருகில் இருந்தார். அவர் சிரித்தபடி, “மகாராஜா, வைத்தியர் சொல்வது சரி. ஆனால், வைத்தியர் உங்களுக்கு மருந்து கொடுத்து குணப்படுத்தினால், அவருக்கு பரிசு கொடுக்க வேண்டும். ஆனால், மருந்து கொடுத்து குணப்படுத்த முடியாவிட்டால், வைத்தியரே உங்களுக்கு பரிசு கொடுக்க வேண்டும்” என்றார். அரசர் சிரித்தார். வைத்தியர் சற்று சங்கடப்பட்டார். “அப்படி எப்படி சாத்தியம்?” என்று கேட்டார். தெனாலி ராமன் சொன்னார்: “மகாராஜா, வைத்தியர் உங்களுக்கு மருந்து கொடுத்து குணப்படுத்தினால், அவர் உங்களுக்கு உயிர் கொடுத்தவர். அதற்காக பரிசு கொடுப்பது நியாயம். ஆனால், மருந்து கொடுத்து குணப்படுத்த முடியாவிட்டால், அவர் உங்களிடம் உயிரை எடுத்தவர். அதற்காக அவர் உங்களுக்கு பரிசு கொடுக்க வேண்டும்!” அரசர் சிரித்தபடி, வைத்தியரிடம், “இனி உன் வைத்திய செலவு இப்படித்தான் இருக்கும்” என்று கூறினார், இந்தக் கதையின் மூலம் நாம் உணர வேண்டியது என்னவென்றால், யாருக்காவது பணம் கொடுக்கும்போது அது அவர்கள் நமக்குச் செய்த நல்ல விஷயங்களுக்கு நன்றி செலுத்தும் மனநிலையால் மட்டுமே இருக்கக் கூடாது. பணம் என்பது அன்பை அளிக்கும் கருவி அல்ல; அது ஒரு பொருளை வாங்கவும், விற்கவும் உருவாக்கப்பட்ட சாதனம் மட்டுமே.  அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்துவதற்கு பணத்தை பயன்படுத்தினால், அது பின்னாளில் சங்கடத்தையும் குழப்பத்தையும் மட்டுமே ஏற்படுத்தும். பணம் செலவிடும் போது தெளிவான நோக்கம் இருக்க வேண்டும் அது தேவைக்காகவோ, பொருளுக்காகவோ, சேவைக்காகவோ இருக்க வேண்டும்.  இந்தக் கதை வலியுறுத்துவது, பணத்தை உணர்ச்சிகளுடன் கலக்காமல், தெளிவான செலவினக் கருவியாகப் பார்க்க வேண்டும் என்பதே. அன்பு, மரியாதை, நன்றி போன்றவை பணத்தால் அளிக்கப்படுவதில்லை; அவை மனதின் உண்மையான வெளிப்பாடுகளால் மட்டுமே நிலைத்திருக்கின்றன. எப்பொழுதுமே தெளிவான நோக்கம் நமது செலவுகளில் இருக்க வேண்டும் !! 

GENERAL TALKS - உலக அமைதி வேண்டும் மக்களே ! WORLD PEACE !




சமீபத்தில் இணையதளத்தில் ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட கருத்து இவ்வாறு பகிர்ந்து கொண்டார் :  கடவுள் மீது அதீத பக்தி கொண்டவர்கள் அனைவரிடமும் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்!   நான் உங்களிடம் ஒரு பேனாவை அன்பளிப்பாக கொடுத்தால், சில நேரங்களில் நீங்கள் அதை மறுக்கலாம், சில நேரங்களில் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் அந்த பேனாவை வாங்கிக் கொண்டால், ஒரு நாள் அல்லது இரண்டு நாள் அதை பத்திரமாக பாதுகாப்பீர்கள். மூன்றாவது நாளில் அது வீட்டின் ஏதோ ஒரு மூலையில் கிடந்து போய்விடும் இதுவே எதார்த்தம்.  சரி, இப்போது கடவுளே திடீரென உங்கள் முன் தோன்றி உங்களுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாக கொடுத்தால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? சந்தோஷத்தின் உச்சத்தில் இருப்பீர்கள் அல்லவா? அந்த பேனாவை பயபக்தியுடன் பெற்றுக் கொண்டு, ஒரு பொக்கிஷத்தை விட மேலான அக்கறையுடன் பாதுகாப்பீர்கள். ஒவ்வொரு மணி நேரமும் அதை தொட்டு பார்க்க தோன்றும். வேறு எந்த பொருளையும் தொலைத்தாலும், அந்த பேனாவை வாழ்நாள் முழுவதும் கண்ணும் கருத்துமாக பாதுகாப்பீர்கள். ஏனெனில் அது கடவுள் கொடுத்த பேனா.  இப்போது உங்களை இந்த உலகிற்கு கொடுத்தது கடவுள் தான் என்று நீங்கள் உறுதியாக நம்பினால், உங்கள் பக்கத்து வீட்டுக்காரனையும், பிற சாதி, மதத்தைச் சேர்ந்தவர்களையும் கடவுள் தான் படைத்தார் என்பதையும் அதே உறுதியுடன் நம்ப வேண்டும். கடவுள் கொடுத்த பேனாவை நீங்கள் எப்படி கண்ணும் கருத்துமாக பார்த்தீர்களோ, அதேபோலவே உங்கள் பக்கத்து வீட்டுக்காரனையும், பிற மதத்தவர்களையும் பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டுமே கடவுள் கொடுத்தவை தானே?  ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? கடவுள் இருக்கிறார் என்று நம்புபவர்களே கடவுளின் படைப்புகளை மதிப்பதில்லை, பாதுகாப்பதில்லை. கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டு, உன்னுடன் வாழும் சக மனிதர்களை அதாவது கடவுளே கொடுத்த பேனாக்களை கஷ்டப்படுத்தி பார்க்கும் நீங்கள் , உண்மையில் கடவுளின் மீது அன்பு உள்ளவரா ?எதிரியை கூட மன்னிக்கலாம், ஆனால் நம்பவைத்து ஏமாற்றுபவர்களை மன்னிக்கக் கூடாது என்று சொல்வார்கள். கடவுளின் பெயரை சொல்லிக்கொண்டு, கடவுளின் படைப்புகளையே அவமதிக்கும் நீங்கள்தான் தான் உண்மையான ஏமாற்றுபவர்களை போல இருப்பதால் உங்களை மன்னிக்கலாமா?  கடவுள் இல்லை என்று சொல்வதை விட, கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டு அவருக்கு எதிராக செயல்படும் நீங்கள்தான் தான் உண்மையான கடவுள் மறுப்பு சிந்தனை உள்ள மனிதர், இந்த விஷயங்கள் உங்களுக்கு கசப்பாக இருந்தாலும் அதீத பக்தி என்ற வகையில் நியாயமற்ற செயல்களை எவ்வாறு செய்ய முடிகிறது. - இந்த விவாதத்தின் முக்கிய நோக்கம் இதுதான். மற்றவர்களைத் துன்பப்படுத்துவது பார்த்து நாம் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், அது கடவுளின் அன்பாகக் கருதப்படுவதில்லை. உலகம் முழுவதும் உள்ள அனைத்து மனிதர்களும் ஒருவருக்கொருவர் அன்பையும் மதிப்பையும் வழங்கி, ஒருங்கிணைந்த சமூகமாக வாழ வேண்டும். குடும்பங்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே மனிதர்களின் மிகப்பெரிய ஆசையாகும். உண்மையான மகிழ்ச்சி, சுயநலத்தை விட்டு விலகி, பிறருக்காக வாழும் மனப்பான்மையில்தான் இருக்கிறது. சுயநலத்தில் மூழ்கியவரால் எத்தனை விஷயங்களையும் சாதிக்க முடியாது; ஆனால் அன்பும் ஒற்றுமையும் கொண்டவரால் சமூகத்தில் நிலையான மாற்றத்தை உருவாக்க முடியும். மனித வாழ்க்கையின் உயர்ந்த நோக்கம், அனைவரும் பாதுகாப்பாகவும் மதிப்புடன் வாழும் சூழலை உருவாக்குவதே.

GENERAL TALKS - நமது சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது !



சமீபத்தில் இணையதளத்தில் ஒரு கருத்துப் பகிர்வை நான் பார்த்தேன். அந்த கருத்துப் பகிர்வு சாதாரணமாக இருந்ததல்ல; அது மாற்றத்தை உருவாக்கக்கூடிய சக்தி கொண்டதாக இருந்தது. 

நேற்று மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி பேருந்தில் பயணம் செய்தபோது, ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தைத் தொடர்ந்து அப்துல் கலாம் நிறுத்தம் என்ற இடத்தில்  வழக்கறிஞர் படிப்பில் பயிலும் ஒரு மாணவி

இரவு 10.30 மணிக்கு பேருந்தில் இருந்து தனியாக இறங்கத் தயாரானார். ஆனால் உடனே நடத்துனர், “உன் பெற்றோர்கள் யாராவது வந்து அழைத்துச் சென்றால்தான் இந்த இரவில் இறக்கி விடுவேன்; இல்லையெனில் இறக்கி விடமாட்டேன்” என்று உறுதியுடன் கூறினார். 

உடனே அவர் மாணவியின் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தார். அவர்கள் வருவதற்கு சுமார் 15 நிமிடங்கள் தாமதமானதால், ஓட்டுனரும் நடத்துனரும் “இப்போது உங்களை இறக்கிவிட முடியாது, தயவுசெய்து பேருந்தில் இருங்கள்; ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பாக இறக்குகிறோம்” என்று அறிவித்தனர். 

பெண் குழந்தையை பாதுகாப்பாக கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அவர்கள் பத்து நிமிடங்கள் காத்திருந்தனர். பின்னர் மாணவியின் சித்தப்பா வந்து அழைத்துச் செல்லும் வரை பேருந்து அந்த இடத்தில் நின்றது. உண்மையிலேயே இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்திய ஓட்டுநர் அந்தோணி ராஜ் மற்றும் நடத்துனர் முத்துராமலிங்கம் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரியவை ! 

இது போன்ற நிகழ்வுகள், சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகின்றன. பெண்களுடைய பாதுகாப்புக்காக இன்னும் பல முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். தனிநபராக நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், உண்மையில் சிஸ்டம் கடினமாகவும் உறுதியானதாகவும் அமைக்கப்பட்டால்தான் பெண்கள் பாதுகாப்பாக வேலைக்கு செல்லவும், பணிக்கு செல்லவும், படிப்புக்கு செல்லவும், வெளியில் சுதந்திரமாகச் செல்லவும் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். அப்படியான சூழல் உருவானால் மட்டுமே அனைத்தும் சரியான பாதையில் இருக்கும்.

இதனால் சமூகத்தில் பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அதுவே நம் நாட்டின் உண்மையான வளர்ச்சியாகும். பெண்களுடைய பாதுகாப்பு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்காமல், குறை கூறுவதில் மட்டும் இணையதளம் அல்லது சமூகமே சிக்கிக் கொள்ளக் கூடாது. பாதுகாப்பை உறுதி செய்யும் நடைமுறைகள், சட்டங்கள், வசதிகள் அனைத்தும் வலுவாக அமல்படுத்தப்பட்டால்தான் பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழவும், நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுக்கவும் முடியும்.

இணையத்தில் பகிரப்படும் சில கருத்துகள் வெறும் வார்த்தைகளாக இல்லாமல், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருக்கும். அந்த சம்பவமும் அப்படித்தான் அது மனிதர்களின் சிந்தனையை மாற்றி, புதிய பார்வையை உருவாக்கும் வல்லமை கொண்டது.

நமது வாழ்க்கையின் மோட்டிவேஷன் ! - #TAMILMOTIVATION-EP.007




சில வார்த்தைகள் எப்போதும் ஆழமான அர்த்தத்தை தருகின்றன. நாம் ஆயிரம் பேரிடம் ஆலோசனை கேட்கலாம், அவர்களின் கருத்துகளை கேட்டு புரிந்துகொள்ளலாம். ஆனால் இறுதியில் நாம் எடுக்கும் முடிவு, நமக்கே நம்முடைய அறிவுக்கு உட்பட்டு சரியானதாகத் தோன்றும் முடிவாக இருக்க வேண்டும். 

அந்த முடிவு தவறாகிப் போனாலும் அதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை, ஏனெனில் அது நம்முடைய சிந்தனை, நம்முடைய தேர்வு. ஆனால் இந்த சுதந்திரத்தை நாம் முடிவெடுக்க வேண்டிய நேரங்களில் இழந்துவிட்டால், பின்னாளில் எவ்வளவு பாடுபட்டாலும் மன திருப்தி அடைய முடியாது. 

நமக்குப் பிடித்த விஷயத்தை நாம் செய்தோம் என்ற அந்த உள்நிலை மகிழ்ச்சி, அந்த மன நிறைவு எப்போதும் நம்மை விட்டு விலகிவிடும். வாழ்க்கையில் உண்மையான திருப்தி என்பது, பிறர் சொன்ன வழியைப் பின்பற்றுவதில் அல்ல; நம் உள்ளம் விரும்பியதைச் செய்து, அதன் விளைவுகளை தைரியமாக ஏற்றுக்கொள்வதில் தான் இருக்கிறது.

இதனால் தான் இன்னொரு முக்கியமான உண்மையை மக்கள் அடிக்கடி கூறுகிறார்கள்: பிறர் சொல்வதைக் காட்டிலும் நம்முடைய சொந்த அனுபவம் மிகுந்த மதிப்புடையது. ஏனெனில், நம்முடைய அனுபவத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் சில நேரங்களில் தவறாகிப் போகலாம். 

ஆனால் அந்த தவறுகளும் நமக்கு பாடமாகி, அடுத்தடுத்த முடிவுகளில் நல்ல பலன்களைத் தரும். பிறர் சொன்ன வார்த்தைகள் தற்காலிகமாக வழிகாட்டலாம், ஆனால் நம்முடைய அனுபவம் நமக்கு நிலையான அறிவையும் உறுதியையும் அளிக்கிறது. வாழ்க்கையில் உண்மையான முன்னேற்றம் என்பது, நம்முடைய சொந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் முடிவுகளில்தான் இருக்கிறது.

சொந்தமாக முடிவெடுக்க பயப்பட வேண்டாம். ஏனெனில், உண்மையான வாழ்க்கை முன்னேற்றம் அந்த நமக்கே சொந்தமான அடுத்தவர்கள் கட்டுப்படுத்தாத முடிவுகளில்தான் இருக்கிறது. பிறர் தரும் ஆலோசனைகளை முழுமையாகக் கேட்டு, அவற்றை ஆராய்ந்து, அதையும் மீறி நம்முடைய அனுபவத்தில் சரியானதாகத் தோன்றினால் மட்டுமே அந்த முடிவை எடுக்க வேண்டும். 

மேலும் நான் சொல்வது என்னவென்றால், நீங்கள் உங்களுடைய சுய ஆலோசனையை மட்டும் அல்லாமல், பொதுவாக இருக்கக்கூடிய அனைத்து கருத்துக்களையும் கருத்தில் கொண்டால் தான் உண்மையான நிலைத்தன்மை எப்படி இருக்கிறது என்பதையும், சூழ்நிலையை புரிந்துகொண்டு முடிவெடுப்பது எப்படி என்பதையும் கற்றுக்கொள்வீர்கள். 

அடாவடியாக ஒரு ராஜாவைப் போல சொந்த முடிவை எடுப்பதைவிட, மிகுந்த அறிவும் அனுபவமும் கொண்ட ஒரு பேரரசரைப் போல சிந்தித்து முடிவெடுப்பது மிகச் சிறந்த விஷயமாகும்.

GENERAL TALKS - நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான கருத்து ! #2




நீங்கள் நம்பினாலும் நம்ப மறுத்தாலும் இதுதான் உண்மை. இந்த காலத்தில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கவேண்டும் என்பதை பணம்தான் தீர்மானிக்கிறது.

மற்றபடி உங்களுடைய திறமைகளை உங்களுடைய தகுதிகளை இதுவரை நீங்கள் மற்றவர்களுக்கு செய்த நன்மைகளை பொறுத்து உங்கள் சமூகத்திலும் குடும்பத்திலும் நண்பர்களிடமும் இந்த விஷயம் தீர்மானிக்கப்படுவதில்லை.

உங்களிடம் பணம் அதிகமாக இருந்தால் உங்களால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும். பணம் என்பது இல்லையென்றால் உங்களால் எதுவுமே சாதிக்க முடியாது. ஒரு சிறிய கல்லை கூட நகர்த்த முடியாது. இதுதான் ரியாலிட்டி

இந்தப் பிரச்சினையால் பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, ஆண்கள் அதிகமாக வேலை செய்கிறார்கள்.

ஆனால், அவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடிய நிறுவனங்கள், பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆண்களை வெளியேற்றுவதற்கான வழிகளையும், குறைந்த சம்பளத்தில் அவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வழிகளையும் தேடுகின்றன. இந்த வழியில், ஆண்கள் ஒரு பண்டமாக நடத்தப்படுகிறார்கள்.

சொந்தமும், நட்பும் தொடர்ந்து பணம் என்ற அடிப்படையில் நமது வீட்டு ஆடவருக்கு துரோகம் செய்துவிடுகிறது. உண்மையை சொல்ல போனால் ஆண்கள்தான் அதிகமாக பழக்கத்தின் அடிப்படையில் பணத்தை கொடுத்து ஏமாறுகிறார்கள். 

இதற்கு காரணம் என்னவென்றால் ஆண்கள் இன்னமும் நிஜமான அன்பு இந்த உலகத்தில் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இங்கே எல்லாமே பணம்தான். 

பணம் இருந்தால் உங்களுக்கு தேவையான அன்பை விலை கொடுத்து வாங்கலாம் என்றுதான் இந்த உலகம் இருக்கிறதே தவிர்த்து உண்மையான அன்பு என்று இப்பொழுதெல்லாம் யாருக்குமே கிடையாது.

பெண்கள் தங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே போல் ஆண்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கையையும் அனுபவத்தையும் மிகவும் மதிக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கு அவர்களுடைய இந்த நோக்கத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். 

எனவே, ஆண்களிடம் அவர்களை சோதனைக்கு உள்ளாக்கும் அளவுக்கு பேசக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். ஆண்களின் வாழ்க்கையில் 1000 சொல்லப்படாத சிரமங்கள் உள்ளன. இவையெல்லாம் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியிருந்தால், உலகம் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. 

எனவே இந்த சம்பவம் கவனமாகக் கையாளப்பட்டு, ஆண்களை அதிகம் காயப்படுத்தாமல் இருந்தால், அது மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும்.

GENERAL TALKS - இது ஒரு பிரபலமான சீன நாட்டுப்புற கதை !

  சீனாவில் ஒரு பெரியவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். முதல் இரண்டு மகன்களுக்கும் திருமணம் செய்து வைத்திருந்தார். வீடு...