புதன், 1 ஜனவரி, 2025

ARC - 008 - கோபமும் கொஞ்சம் தேவைதான்


ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது. சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள் " என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது. தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான். பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான். பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான். பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான். பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார். கோபம் மனுஷனுடைய வாழ்க்கையின் அடிப்படை ! நம்முடைய கோபத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். இதனை கற்றுக்கொள்வது கஷ்டம்தான். இருந்தாலும் மிகவும் பயனுள்ள ஒரு திறன் இதுவாகும். 



ARC - 007 - உதவும் கரங்கள்




ஒருவன் தன் தோட்டத்தில் நன்கு விளைந்திருந்த காய்கறிகளை மார்க்கெட்டில் கொண்டுபோய் விற்க புறப்பட்டான். அதனால் காய்கறிகளை தன் வண்டியில் கட்டிக் கொண்டு சென்றான். அப்படி போகும் போது, வழியில் அவனது வண்டியின் சக்கரம் பள்ளத்தில் மாட்டிக் கொண்டு, காய்கறிகள் கீழே விழந்துவிட்டன. அப்போது அவன் கடவுனே எனக்கு உதவி செய் என்று வேண்டினான். இப்போது கடவுள் வரவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தான். இருப்பினும் வரவில்லை. அருகில் யாரும் இல்லை. ஆகவே அவனே அந்த வண்டிச் சக்கரத்தை தூக்கி மேட்டில் வைத்தான். இப்போது சுலபமாக அவனால் தூக்க முடிந்தது. அந்த நேரத்தில் அவன் "தன்னால் தூக்க முடியாது என்று நினைத்த வண்டியின் சக்கரத்தை தூக்கிவிட்டேனே! " என்று நினைத்து ஆச்சரியப்பட்டான். அப்போது பின்னால் திரும்பி பார்த்தான். அந்த வழியில் வந்த ஒரு துறவி அவனுக்கு உதவினார். அந்த துறவிக்கு அவன் தன் நன்றியைக் கூறி, "அத்தனை முறை கடவுளை அழைத்தும். அவர் வந்து உதவவில்லை, ஆனால் நீங்கள் வந்து எனக்கு உதவியதற்கு நான் மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்" என்று கூறினான். அப்போது அந்த துறவி, "எதற்கு கடவுள் மீது கோபம் கொள்கிறாய்? அவர் உனக்கு உதவி செய்யவில்லை என்று சொல்லாதே. நீ ஏதேனும் முயற்சி செய்தால் தானே. அவரால் உனக்கு உதவ முடியும்" என்று சொன்னார். பின் "நீ முயற்சி செய்ததால் தானே. நானே வந்து உதவினேன். ஆகவே அவர் உனக்கு உதவ வேண்டும் என்றால் அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடு" என்று கூறி சென்று விட்டார்.

ARC-006 - கொஞ்சம் அசால்ட்டு / எப்போதும் அலார்ட்டு



ஒரு கிராமத்தில் ஒரு குருவும் அவருடைய சீடர்களுடம் ஆற்றங்கரையோரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டே சென்றனர். ஒரு சீடன் கேட்டான், “குருவே, இளமை காலத்தில் நீங்கள் ஒரு பெரிய போர் வீரராக இருந்ததாகவும். பல நாடுகளுக்குப் பயணம் செய்து வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்ததாகவும் மூத்த சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார் களே! நிஜம்தானா?” “நிஜம்தான். ஆனால் அதெல்லாம் அந்தக் காலம். இப்போது நான் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டேன்!” என்றார் குரு. “ஏன் குருவே? போர் தவறா ஆயுதங்களே வேண்டாமா?” “சரி தவறு என்பதல்ல என் வாதம் ஒரு கட்டத்துக்குமேல் புத்திக் கூர்மையும் அமைதியையும் விட சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை என்று புரிந்துவிட்டது எனக்கு! " குருவின் வார்த்தைகளில் சீடர்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. அவரை சோதித்துப் பார்த்துவிட முடிவு செய்து. ஒரு திட்டம் போட்டனர். “நாளை குரு தியானத்தில் இருக்கும்போது. நாம் இருவரும் மறைந்திருந்து அவரைத் தாக்குவோம். அப்போது அவர் ஆயுதங்களை எடுக்காமல் நம்மை எப்படிச் சமாளிக்கிறார் என்று பார்ப்போம். ” என்று முடிவு செய்தனர். மறுநாள் வகுப்புகள் முடிந்ததும், குரு வழக்கம் போல தியானத்தில் ஆழந்துவிட இந்த இரு சீடர்கள் மட்டும் ஓலை தட்டிகளுக்கு அப்பால் மறைந்து கொண்டனர். சில நிமிடங்கள் கழித்து இருவரும் மெல்ல வெளியில் வந்தனர். பேசி வைத்தபடி இருவரும் குருவின் மீது ஏக காலத்தில் இரு பக்கமிருந்தும் பாய்ந்தனர். குரு முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவர்கள் பக்கத்தில் நெருங்கும்வரை கண்மூடி அமைதியாக இருந்த குரு. கடைசி விநாடியில் சற்று முன்னே வந்து குனிந்துகொண்டார். சீடர்கள் இருவரும் மடேர் என்று மோதிக் கொண்டு தரையில் விழுந்து உருண்டனர். எதுவும் நடக்காதது போல் தியானத்தைத் தொடர்ந்தார் குரு! குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் இல்லை என்பதையும் அறிவுக்கு மிஞ்சிய ஆயுதம் இல்லை என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டார்கள்.கொஞ்சம் அசால்ட்டாக இருந்தாலும் எப்போதும் அலார்ட்டாக இருக்க வேண்டும் ! 


ARC-005 - எனது கண்ணை நேற்றோடு காணவில்லை !



ஒரு மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஃபெயில், தலைமை ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது. “இந்தப் பள்ளியில் பத்துவருஷமாப் படிச்சிருக்கே; ஒரு பாடத்துல கூட பாஸாகலை. வகுப்புல பாடம் நடத்தும் போது நீ என்ன காதுல பஞ்சு வெச்சு அடைச்சுகிட்டிருந்தியா?”ன்னு கோபமாக திட்டினார்.. அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான். “இனி நீ படிக்க லாயக்கே இல்லை” என்று டி.ஸி. கொடுத்து அனுப்பி விட்டார். அந்தப் பையன் தெருவில் இறங்கி நடந்தான். “உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே?” என்ற அந்த வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. உடனே தன் காதுகள் இரண்டையும் நன்றாக முடினான். அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. ஒரு புதிய சிந்தனை உருவானது. தலைமையாசிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான். ஒரு புது சாதனத்தை வடிவமைத்தான். அதன் பெயர் இயர் மஃப். பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் தொந்தரவின்றிப் படிக்க வாங்கினார்கள். இரைச்சலான இடங்களில் வேலை செய்பவர்கள் வாங்கினார்கள். ஓரளவுக்கு வியாபாரம் நடந்தது. அந்தச் சமயம் முதல் உலகப் போர் ஆரம்பமானது. பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர் மஃப் கட்டாயம் அணிய வேணடும் என அதிகாரி உத்தரவிட்டார். போர்வீரர்களுக்கு வசதியாக ஹெல்மட்டில் அமைத்து கொடுத்தான். கோடீஸ்வரனானான். இது உண்மையா நடந்த விஷயமா என்று தெரியவில்லை. இருந்தாலும் ஒரு கஷ்டமான விஷயத்தில் இருந்து மேலே வருவதற்கு உங்களுடைய திறமைகளை பயன்படுத்த எப்போதுமே தயங்கவே கூடாது. இந்த திறமைதான் உங்களுடைய மதிப்பை கொடுக்கும். 




♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...