புதன், 5 பிப்ரவரி, 2025

GENERAL TALKS - யோசிக்க வேண்டிய ஒரு கருத்து !


"நான் குழந்தையாக இருந்தபோது என் வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் அப்பா." அவரை என் அம்மாவுக்கும் பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர். அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப் போனார். நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது. என் அப்பாவும் அம்மாவும் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவரோ அறிவுரை எதுவும் கூறுவது இல்லை அவர் கூறுவது அனைத்தும் சுவாரசியமாகவே இருந்தது. அவர் ஒரு அற்புதமான கதை சொல்லி, அவர் தன்னுடைய பேச்சுத் திறமையால் மணிக்கணக்கில் கட்டிப் போட்டுவிடுவார். காதல் கதைகளை உள்ளம் உருக சொல்லுவார். நகைச்சுவைகள் பல நலம் பட உரைப்பார். வீரக் கதைகளை உணர்ச்சிபொங்கக் கூறுவார். அறிவியல், அரசியல் வரலாறு இன்னும் பலவற்றையும் கரைத்துக் குடித்தவர். கற்றுத்தருபவர். விந்தைகள்பல செய்து வியக்க வைத்தார். அவர் என்னை சிரிக்கவும் வைப்பார். சிந்திக்கவும் வைப்பார். அழவைத்து வேடிக்கையும் பார்ப்பார். அச்சுறுத்தியும் மகிழ்வார். ஆனந்தத்தில் மிதக்க வைப்பார். அவஸ்தையிலும் மூழ்க அடிப்பார். நாட்கள் விரைந்தது. நாளுக்கு நாள் அவரது பேச்சு அதிகரித்ததே தவிர குறையவில்லை. அம்மாவுக்கு இப்போதெல்லாம் அவரைப் பிடிப்பதில்லை. அவரை வெளியே அனுப்பிவிட விரும்பினாள். ஆனால் அது முடியவில்லை. அப்பா அவரைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. தற்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு உறவினர்கள் வருவதில்லை. உறவினர்களை சரியாக கவனிக்க முடியாமல் அவர் தடுத்தார். நெடுநாளைய நண்பர்களும் எங்களிடமிருந்து விலகிப் போனதற்கு அவர் காரணமானார். எனது தந்தை மது அருந்துவதை விரும்பமாட்டார். அவரோ மது அருந்துவதை உற்சாகத்துடன் ஊக்குவித்தார். சிகரெட் பிடிப்பது புகையிலை பயன்படுத்துவது இவற்றை ஒளிவு மறைவின்றி யார் இருந்தாலும் தயக்கம் இல்லாமல் தவறில்லை என்பது போல் தினந்தோறும் கூறி வந்தார். அதுவும் முதல் இரவு மேட்டர் என்றால் கூச்சமில்லாமல் எல்லோர் முன்னிலையிலும் அவரால் பேச முடிகிறது. எங்கள் அன்றாட வாழ்க்கையில் உறவுமுறை முதல் உணவு முறை வரை அவரால் மாற்றங்கள் ஏற்பட்டது. நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கூட குறைந்து போனது. எனது தாய் தந்தையர் பின்பற்றச் சொல்லும் நல்ல விஷயங்களுக்கு எதிராகவே கருத்து கூறி வருவதை வழக்கமாகக் கொண்டார். நல்ல கருத்துக்களை அவர் காது கொடுத்துக் கேட்பதில்லை. நாங்கள் எங்கு இடம் மாறினாலும் கூடவே வந்த அவரை தடுக்க முடிய வில்லை. இப்போது நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தாலும் அவரைப் பார்க்கலாம். இன்னமும் ஹாலில் உட்கார்ந்துகொண்டு உங்களுடன் பேசக் காத்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் பேசுகிறோமோ இல்லையோ அவர் உங்களிடம் நிச்சயம் பேசுவார். அப்படி யார் அவர்? அவர் பெயர் என்ன? அவருக்கும் உங்களுக்கும் உள்ள பந்தம் என்ன? என்றுதானே கேட்கிறீர்கள்? அவருடைய பெயரை சொன்னால் நீங்கள் இப்படிப் கேட்க மாட்டீர்கள். கொஞ்சம் இருங்கள் அவரைப் பற்றி இடைவிடாமல் சொன்னதில் தாகம் எடுத்துவிட்டது. இதோ தண்ணீர் குடித்துவிட்டு வந்து அவர் யாரென்று கூறுகிறேன். சொல்கிறேன் கேளுங்கள். அவரை நாங்கள் "டிவி" என்றழைப்போம். அவருக்கு திருமணம் ஆகி விட்டது. அவருடைய மனைவியும் எங்கள் வீட்டில் நிரந்தர இடம் பிடித்துவிட்டார். அவருடைய மனைவியின் பெயர் கம்ப்யூட்டர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு. அவனும் எங்களோடு விடாப்பிடியாக ஒட்டிகொண்டான். அவன் பெயர் கைபேசி. இவர்களை குடும்பத்துடன் வெளியே அனுப்பும் காலத்தை இறைவன் விரைவிலேயே தந்தருவானாக!

கருத்துகள் இல்லை:

CINEMA TALKS - 2023 - ல் வெளிவந்த தமிழ் படங்கள் !

  Dear Death Vindhya Victim Verdict V3 Thunivu Varisu Vallavanukkum Vallavan Beginning Meippada Sei Kalathil Vendr...