Tuesday, February 4, 2025

ARC - 113 - கண்ணுக்கு தெரியாத சாதகத்தன்மைகள் !

 



ஓர் அசந்தர்ப்பமான சூழ்நிலையில் தன் படைப் பிரிவிலிருந்து பிரிந்துவிட்டான் ஒரு போர்வீரன். ஒரு சின்னஞ்சிறிய தீவில் மாட்டிக்கொண்டான்  படைப்பிரிவைத் தேடி, அவர்களோடு சேர்ந்துகொள்ள வேண்டுமே.” என்கிற ஏக்கம் ஒருபுறம். “எதிரிகளிடம் மாட்டிக்கொண்டுவிடக் கூடாதே” என்கிற பயம் ஒருபுறம். அந்த வீரன் கடற்கரையோரமாக நடந்தான். அவனிடம் துப்பாக்கி இருந்தது. உணவும் கொஞ்சம் நீரும் கூட இருந்தது. ஆனால், எதிரிகள் குறித்த பயம் மட்டும் அவனைப் படுத்தியெடுத்தது. கொஞ்சம் தூரம் நடந்திருப்பான். ஒரு சத்தம் அவனை உலுக்கியது. காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டு சத்தத்தைக் கவனித்தான். செடிகளை விலக்கிக்கொண்டு, சருகுகளை மிதித்துக்கொண்டு சிலர் வேகமாக முன்னேறி வரும் சத்தம். அவனுக்குப் பயம்2 உறுதியாகிவிட்டது. நிச்சயம் வருபவர்கள் எதிரிகளாகத்தான் இருக்க வேண்டும். தன்னந்தனியாக இருக்கிறான். கூட அவன் தோழர்கள் யாரும் இல்லை. என்ன செய்வது. ஒளிவதைத் தவிர வேறு வழியில்லை. அவசர அவசரமாக ஒளிந்துகொள்ளத் தோதான இடம் ஒன்றைத் தேடினான். அருகில் ஒரு குன்று இருந்தது. அதன்மேல் வரிசையாகச் சில குகைகள் இருப்பது தெரிந்தது. விறுவிறுவென்று அந்தக் குன்றில் ஏறினான். நான்காவதாக இருந்த குகைக்குள் நுழைந்து உள்ளே போய் ஒடுங்கி, உட்கார்ந்து கொண்டான். கொஞ்சம் வசதியாக இருந்தது குகை; பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தான். கப்பற்படையில் இருந்ததால், ராணுவ நடைமுறைகளையும் செயல்பாடுகளையும் அவன் நன்கு அறிவான். வருபவர்கள் நடந்தவிதத்தை வைத்து அவர்கள் யாரையோ தேடிவருகிறார்கள் என்பதை அவன் உணர்வு சொன்னது. “அப்படித் தேடிவரும் பட்சத்தில் நிச்சயமாக இந்தக் குகைகளையும் விட்டுவைக்க மாட்டார்கள். அப்படியானால் என்னைக் கண்டுபிடித்துவிடுவார்கள். கண்டுபிடித்துவிட்டால்..? அவ்வளவுதான் உயிர் உடலில் தங்காது” இப்படி நினைத்ததும் அவன் உடல் நடுங்கியது. “இப்போது என்ன செய்வது? நாம் தப்பிப்போம் என்று நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. பிரார்த்தனை. அதை மட்டும்தான் இப்போது செய்ய முடியும்.” அவன் கண்களை மூடி பிரார்த்தித்தான். “கடவுளே. என்னை என் எதிரிகளிடமிருந்து காப்பாற்று. உன்னை மனமார நம்புகிறேன். மனமுருக வேண்டுகிறேன்.” அவன் பிரார்த்தித்த அந்த ஒரு கணத்தில், தான் நிச்சயம் காப்பாற்றப்படுவோம் என்று முழுமனதோடு நம்பினான். “ஆனால். அது என்ன? கும்பலாகச் சிலர் அந்தக் குன்றின் மேல் ஏறிவருவதுபோலச் சத்தம் கேட்கிறதே! நிச்சயம் அவர்கள்தான். எதிரிகள்தான். அய்யோ. நான் என்ன செய்வேன்?” இப்படி அவன் யோசித்துக் கொண்டிருந்தபோதே அதைப் பார்த்தான். அது ஒரு சிறிய சிலந்தி. உள்ளே ஒரு மனிதன் இருக்கிறானே என்கிற பயமில்லாமல், அது பாட்டுக்கு வேலையில் இறங்கியது. அந்தக் குகையின் வாசலில் ஒரு வலையைப் பின்ன ஆரம்பித்தது. அந்த வீரனுக்கு அது வேடிக்கையாக இருந்தது. “நான் என்ன கேட்டேன். கடவுள் என்ன செய்கிறார்? கல்லாலான ஒரு சுவரைக் கொண்டு இந்தக் குகை வாசலை கடவுள் மூடியிருக்க வேண்டாமா? ஒரு சிலந்தியை அனுப்பிவைத்திருக்கிறாரே.” என்று நினைத்தான். இப்போது சில படை வீரர்கள் வரும் சத்தம் நன்றாகக் கேட்டது. அவர்கள் மேலே வந்துவிட்டார்கள். முதல் குகையருகே அவர்கள் நிற்பதும் அதற்குள்ளே ஓர் ஆள் நுழைந்து, “இங்கே யாரும் இல்லை” என்று சொல்வதும் அவன் காதில் விழுந்தது. அவனுக்கு உடல் தூக்கிவாரிப்போட்டது. குகையின் கடைசி நுனிக்குப்போய் கற்பாறையை ஒட்டி உட்கார்ந்துகொண்டான். அந்தச் சிலந்தி வெளியே கேட்கும் ஆள் அரவம், உள்ளே அவன் இருப்பது எதையும் கண்டுகொள்ளவில்லை. அதுபாட்டுக்கு வலை பின்னுவதில் பிஸியாக இருந்தது. அவர்கள் இரண்டாவது குகைக்குள் நுழைந்து தேடிப் பார்த்தார்கள். எதுவும் அகப்படாமல் அடுத்த குகைக்குள் நுழைந்தார்கள். அதற்கடுத்து அவர்கள் இவனிருக்கும் குகைக்குள்தான் வந்தாக வேண்டும். எப்படியும் ஒருவன் உள்ளே வந்து பார்க்கத்தான் போகிறான். “கடவுளே.” அவன் கண்களை மூடிக்கொண்டான். அவன் இதயம் வேகமாகத் துடித்தது. அவனிருந்த குகை வாசலில் சிலர் நிற்பதும், “நிச்சயம் இதுக்குள்ள யாரும் இருக்க மாட்டாங்க” என்று ஒருவன் சொல்வதும் கேட்டது. அவர்கள் குகைக்குள் தேடாமலேயே அங்கிருந்து நகர்ந்துபோனார்கள். அன்றைக்கு அந்த வீரன் உயிர்பிழைத்தேவிட்டான். இப்போது அவனுக்குக் காரணம் புரிந்துவிட்டது. குகை வாசலில் கூடுகட்டிக்கொண்டிருக்கிறது ஒரு சிலந்தி. அப்படியானால், சிறிது நேரத்துக்கு முன்னால் யாரும் அதற்குள் நுழைந்திருக்க வாய்ப்பில்லை. இப்படி நினைத்துத்தான் எதிரிகள் உள்ளே நுழையாமல் சென்றுவிட்டார்கள். அவன் கண்களை மூடிக்கொண்டு சொன்னான். “கடவுளே. மிக்க நன்றி. என்னை மன்னித்துவிடு கடவுளே. ஒரு கல் சுவரைவிட நீ அனுப்பிய சிலந்தியின் வலை வலுவானது என்பதை நான் மறந்துவிட்டேன். நம்முடைய சூழ்நிலைகளில் எவ்வளவு கடினத்தன்மை இருந்தாலும் கண்ணுக்கே தெரியாத ஒரு சாதகத்தன்மை இருக்கிறது. அதனை பயன்படுத்திக்கொண்டு மேலே வருவதுதான் சாமர்த்தியமானது !

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...