Wednesday, February 5, 2025

STORY TALKS - மொத்தமாக 3 அறிவுரைகள் !


வேட்டையாடச் சென்ற ஒருவரின் கையில், பறவை ஒன்று சிக்கியது. அந்தப் பறவை, அவரிடம், உனக்கு நான் மூன்று அறிவுரைகள் தருகிறேன், என்னை விட்டு விடு என்று கெஞ்சியது. சரி, அந்த அறிவுரைகளைச் சொல் என்று கேட்டார் அவர். 


அதற்கு அந்தப் பறவை, உன் கையிலிருந்து என்னை விட்டு விட்டதற்குப் பிறகு முதல் அறிவுரை சொல்கிறேன் என்றது. நான் மரத்தில் போய் உட்கார்ந்த பிறகு, இரண்டாவது அறிவுரையையும், நான் அதிலிருந்து பறந்ததற்குப் பிறகு மூன்றாவது அறிவுரையையும் சொல்கிறேன் என்று சொன்னது பறவை. அவரும் அந்தப் பறவையை, தனது பிடியிலிருந்து விட்டார். 


அப்போது அந்தப் பறவை, முதலில் உன் கடந்தகாலத் தவறுகளையும், நீ இழந்தவைகளையும் எண்ணி சுமைகளாக்கி, உன் வாழ்வைப் பாழாக்கிக் கொள்ளாதே என்று சொன்னது. 


பின்னர், அருகில் இருந்த மரத்திற்குச் சென்று உட்கார்ந்த பின், யார் எதைச் சொன்னாலும், அதை உன் அறிவு கொண்டு சிந்தித்துப் பார், அதை அப்படியே நம்பி விடாதே. உன் அறிவு கொண்டு நீ சிந்தனை செய்தால்தான், எதையும் நீ சரியாகச் செய்ய முடியும் என்று தனது இரண்டாவது அறிவுரையைச் சொன்னது பறவை. 


இவ்வாறு சொன்ன அந்தப் பறவை, வேடரைப் பார்த்து, “பைத்தியக்காரா, என் உடலுக்குள் இரண்டு அற்புதமான பெரிய வைரங்கள் இருக்கின்றன, என்னை கொலை செய்திருந்தால் அவற்றை நீ அடைந்து இருக்கலாம். உன் பிடியிலிருந்து என்னை விட்டு விட்டாயே என்று சொன்னது. 


அதற்கு அந்த மனிதர், “சரி இப்ப என்ன, விட்டு விட்டேன், வேதனைதான், பெரிய இழப்பு தான், பெரிய தவறுதான் என்று சிறிதுநேரம் புலம்பி விட்டு, அந்த மூன்றாவது அறிவுரையைச் சொல் என்றார். 


அதற்கு அந்தப் பறவை, உன் கடந்த காலத் தவறுகளை நீ இழந்தவற்றையும் எண்ணி நொந்து போகாதே என்று, நான் உனக்கு முதலில் சொன்னது நினைவு இருக்கிறதா, ? நீ அதைத்தான் இப்போது செய்கிறாய் என்று சொன்னது. 


அடுத்து, இரண்டாவது அறிவுரையாக, யார் எதைச் சொன்னாலும், அதை உன் பகுத்தறிவு கொண்டு சிந்தித்துப் பார், அதை அப்படியே நம்பி விடாதே என்று சொன்னேன். 


இவ்வளவு சிறிய பறவையாகிய என் வயிற்றில் இவ்வளவு பெரிய இரண்டு வைரங்கள் இருக்கின்றன என்று, நான் சொன்னால் அதை நீ நம்பிய உனது அறிவற்ற தனத்தை என்ன சொல்வது? எனவே உனக்கு எது சொன்னாலும் பயன்படாது என்பதே மூன்றாவது அறிவுரை என்று சொல்லிவிட்டுப் பறந்தது, அந்த அறிவாளிப் பறவை. 


தீர விசாரிக்காமல் எல்லாவற்றையும் நாம் கண்ணை மூடிக் கொண்டு நம்பிக் கொண்டு இருக்கிறோம். எதையும் அறிவு கொண்டு சிந்திப்போம்.

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...