𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

வெள்ளி, 5 ஏப்ரல், 2024

GENERAL TALKS - கவனமாக வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் !



இந்த கதையை படியுங்கள். ஒரு ஊரில் ஒரு ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்கு கண் பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாக குழந்தையும் இல்லை. ஒருநாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கிக் கிடந்த பெரிய மீனொன்று அவனைப் பார்த்து கெஞ்சியது."மீனவனே, நான் சாதாரண மீன் இல்லை. கடலில் உள்ள மீன்களுக்கெல்லாம் தலைவன் என்று அழைக்கப்படும் மாய சக்திகளை உள்ள தேவதை மீன் நான். எப்போதுமே ஆழ்கடலில் வசிக்கும் நான், ஒரு பெரிய அலையில் சிக்கி இந்த கரைப் பகுதிக்கு தவறுதலாக வந்து விட்டேன். இப்போது நீந்த முடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன். எனக்கு ஒரு உதவி செய் மீனவனே, என்னை பத்திரமாக ஆழ்கடலுக்கு கொண்டு போய் சேர்த்து விட்டால் உனக்கு ஒரு வரம் தருவேன்" என்றது.மீனவன் அந்த மீனைத் தூக்கி படகில் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகை செலுத்திக் கொண்டு போய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு, என்ன வரம் கேட்பது என்று யோசித்தான். அவனால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. எனவே அவன் சொன்னான். "மீன்களின் ராஜாவே, நீ சொன்னபடி நான் செய்து விட்டேன். ஆனால், என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. வீட்டுக்குச் சென்று மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்து விட்டு நாளை வந்து கேட்கிறேன்" என்றான். மாயாஜால மீனும், "நீ ஒரே ஒரு வரம் தான் கேட்க வேண்டும்'' என்று நினைவு படுத்தி நன்றி கூறிச் சென்றது. மீனவன் வீட்டுக்கு சென்றான். வீட்டில் பெற்றோரிடமும், மனைவியிடமும் நடந்ததைக் கூறினான். ராஜா மீனிடம் என்ன வரம் கேட்பது என்று ஆலோசித்தான். அவனது தந்தை கூறினார், "மகனே, நாம் நெடுங்காலமாக இந்த ஓட்டைக் குடிசையில் தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு ஒரு நல்ல வீடு வேண்டும் என்று ராஜா மீனிடம் கேளேன்...'' என்றார்* அடுத்ததாக அவனது அம்மா சொன்னார்கள், "மகனே, எனக்கு கண் தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. என் கண்களுக்கு பார்வை பெறவேண்டும் என்று அந்த மீனிடம் கேள்...'' என்றார்.கடைசியாக மனைவி கேட்டாள், நமக்குத் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகி விட்டன. இன்னும் நமக்கு ஒரு குழந்தை இல்லை. எனவே, அந்த மீனிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேளுங்கள்" என்றாள். நன்கு யோசித்த மீனவன், மறுநாள், அந்த கடலுக்குச் சென்று ராஜா மீனிடம் ஒரே ஒரு வரம் தான் கேட்டான். அந்த ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும், அவன் மனைவியின் விருப்பமும் நிறைவேறின. அப்படி அவன் என்ன வரம் கேட்டான்? "என் மகன் கீழே விளையாடி கொண்டிருப்பதை, எங்கள் வீட்டு மாடியிலிருந்து என் பெற்றோர் பார்த்து மகிழவேண்டும்'' என்பது தான் அவன் கேட்ட வரம்.* இந்த கதையின் கருத்து என்னவென்றால் உங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தால் கண்டிப்பாக அறிவு நுணுக்கமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஒரு வாய்ப்பு ஒரே ஒரு வாய்ப்பு என்றாலும் சிறப்பாக பயன்படுத்தினால் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கும் வாய்ப்பாக அமைந்துவிடும் ! வெறும் பேச்சு திறமை கூட உங்களுக்கு வெற்றியை கொடுக்கலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக